Asia Cup 2022: ஆசிய கோப்பையில் இந்திய தரப்பில் அசத்திய டாப் 5 வீரர்கள் யார் யார்? தெரியுமா?
ஆசிய கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 27-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்ல இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள் களமிறங்குகின்றன. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் விராட்கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட பலரும் இறங்குகின்றனர்.
ஆசிய கோப்பையில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசிய 5 வீரர்களின் பட்டியலை கீழே காணலாம்.
- சச்சின் டெண்டுல்கர்
எந்தவொரு கிரிக்கெட் சாதனையை எடுத்தாலும் தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலிலும் இந்தியாவிற்காக முதலிடத்தில் உள்ளார். அவர் ஆசிய கோப்பையில் இதுவரை 21 இன்னிங்சில் ஆடி 971 ரன்களை குவித்துள்ளார். 1995ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை சச்சின் டெண்டுல்கர் ஆசிய கோப்பையில் ஆடியுள்ளார். மேலும், தன்னுடைய 100வது சதத்தையும் ஆசிய கோப்பையில்தான் வங்கதேச அணிக்கு எதிராக 2012ம் ஆண்டு விளாசினார். அதில் 2 சதங்கள், 7 அரைசதங்கள் அடங்கும்.
- ரோகித் சர்மா
இந்திய கேப்டன் ரோகித்சர்மா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 26 இன்னிங்சில் ஆடி 883 ரன்கள் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 111 ரன்களை விளாசியுள்ளார். ஒரு சதம் உள்பட 7 அரைசதங்களை விளாசியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஆசிய கோப்பையில் மட்டும் 317 ரன்களை விளாசியுள்ளார்.
- விராட்கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் ஆசிய கோப்பையில் 14 இன்னிங்ஸ் மட்டுமே ஆடி 766 ரன்களை விளாசியுள்ளார். அதில் 3 சதங்களும், 2 அரைசதங்களும் அடங்கும். விராட்கோலியின் ஒருநாள் போட்டியின் அதிகபட்ச ரன்னாகிய 183 ரன்களை அவர் ஆசிய கோப்பையில்தான் விளாசியுள்ளார். 2012 மற்றும் 2016ம் ஆண்டு ஆசிய கோப்பையில் அதிக ரன்களை விளாசி அசத்தினார்.
- எம்.எஸ்.தோனி :
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 20 இன்னிங்சில் ஆடி 690 ரன்களை விளாசியுள்ளார். அவர் 1 சதம், 3 அரைசதங்களை ஆசிய கோப்பையில் விளாசியுள்ளார். 2008ம் ஆண்டு ஆசிய கோப்பையில் மட்டும் 327 ரன்களை விளாசினார். அதிகபட்சமாக 109 ரன்களை விளாசியுள்ளார்.
- ஷிகர் தவான் :
இந்திய அணிக்காக ஆசிய கோப்பைத் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ஷிகர்தவான். அவர் இதுவரை 13 இன்னிங்சில் ஆடி 613 ரன்களை விளாசியுள்ளார். அவர் இதுவரை 2 சதங்கள், 3 அரைசதங்களை விளாசியுள்ளார். 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் 342 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 127 ரன்களை விளாசியுள்ளார்.
மேலும் படிக்க : Team India Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மாஸ்...! இந்தியா படைத்த புதிய சாதனை என்ன தெரியுமா..?
மேலும் படிக்க : Shubman Gill Catch Video: சிக்கந்தர் ராஸாவை சிக்க வைத்த சுப்மன் கில் கேட்ச்... வைரல் வீடியோ..