Asia Cup IND vs PAK : ஹர்திக், ஜடேஜா அபார பேட்டிங்..! பாகிஸ்தானை பழிதீர்த்த இந்தியா..! கடைசி ஓவரில் திரில் வெற்றி..!
Asia Cup IND vs PAK : ஜடேஜா - ஹர்திக் பாண்ட்யாவின் அபார பேட்டிங் பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக திரில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அறிமுக வீரர் நசீம்ஷா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே இந்தியாவின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் தான் சந்தித்த முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து வந்த விராட்கோலி அளித்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நழுவவிட்டார். முதல் ஓவரில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 3 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முதல் ஓவரிலே கே.எல்.ராகுல் ஆட்டமிழந்ததால் விராட்கோலி – ரோகித்சர்மா சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தஹானி வீசிய இரண்டாவது ஓவரில் விராட்கோலி இந்தியாவிற்காக முதல் பவுண்டரியை விளாசினார். விராட்கோலியும், ரோகித்சர்மாவும் ஓரிரு ரன்களாக எடுத்தனர். 3 ஓவர்களில் இந்திய அணி 15 ரன்கள் எடுத்தது. ரோகித்திற்கு அதிகளவில் ஸ்ட்ரைக் கிடைக்காததால் விராட்கோலி துரிதமாக ரன்களை சேர்த்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்த விராட்கோலி தனது வழக்கமான ஷாட்களை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களை எடுத்திருந்தது. நீண்ட நேரமாக ஸ்ட்ரைக் கிடைக்காத ரோகித் சர்மா முகமது நவாஸ் பந்தில் சிக்ஸர் அடித்து அதிரடிக்கு மாறினார். அணியின் ஸ்கோர் 50 ரன்களை எட்டியபோது இந்திய அணி 12 ரன்களில் அவுட்டானார். ரோகித்சர்மா ஆட்டமிழந்த பிறகு சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா களமிறங்கினார்.
பார்முக்கு திரும்பிய நிலையில் விராட்கோலி 34 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதனால், ஜடேஜா – சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். 10 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் வீரர்களும் கட்டுக்கோப்பாக பந்துவீசியதாலும், இந்திய வீரர்களும் ரன்களை சேர்த்ததாலும் இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு சம அளவில் இருந்தது.
கடைசி 6 ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், இந்திய அணி அதிரடியாக ஆட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இக்கட்டான நேரத்தில் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் போல்டானாதால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, ஜடேஜாவுடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 15.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ஹர்திக் பாண்ட்யாவும், ஜடேஜாவும் துரிதமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர்.
பாகிஸ்தான் அணியினரின் சிறப்பான பீல்டிங்கால் இந்திய அணிக்கு பவுண்டரிகள் கிடைக்கவில்லை. இதனால், ஜடேஜாவும், ஹர்திக்கும் இரண்டு ரன்களாக ஓடி எடுத்தனர். கடைசி 18 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டதால் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் தங்களது நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
நசீம்ஷா வலியுடன் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி விளாசினாலும் அடுத்தடுத்த பந்துகளில் தடுமாறினார். ஆனால், 5வது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு அனுப்பினார். இதனால், கடைசி 12 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஹரீஷ் ராப் வீசிய 19வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசினார். கடைசி பந்தையும் ஹர்திக் பாண்ட்யா பவுண்டரிக்கு விளாசியதால் இந்தியாவின் மீதான அழுத்தம் குறைந்தது. ஹர்திக் – ஜடேஜா பார்ட்னர்ஷிப் 32 பந்துகளில் 50 ரன்களை கடந்தது.
கடைசி பந்தில் 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற சூழல் உருவாகியது. கடைசி ஓவரின் முதல் பந்திலே ஜடேஜா அவுட்டானதால் இந்திய அணிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கடைசி 5 பந்தில் 7 ரன்கள் தேவை என்ற சூழலில் தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்தார். அவர் 2வது பந்தில் ஒரு ரன் எடுக்க, 3வது பந்தை ஹர்திக் பாண்ட்யா டாட் பால் ஆக்கினார். இதனால், 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற சூழலில் ஹர்திக் பாண்ட்யா மிகவும் கூலாக சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜடேஜா 29 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் அவுட்டானாலும், ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றி மூலம் உலககோப்பை டி20 தோல்விக்கு இந்தியா பழிதீர்த்தது. பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும், நசீம்ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.