Vinayaga Chathurthi 2022 : பிள்ளையாரை கொண்டாட ரெடியா? ஈஸியான கொழுக்கட்டை ரெசிப்பி இதோ..
Vinayagar Chaturthi Kolukattai Recipe in Tamil: மோதகப் பிரியன் எனும் பெயரால் பிள்ளையாரும் அவருக்குப் பிடித்த கொழுக்கட்டையும் ஒன்றுசேர நம் ஊரில் கொண்டாடப்படுகின்றன.
பிள்ளையார் சதுர்த்தி என்றாலே முந்தி விநாயகருக்கு முந்தி நம் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை.
மோதகப் பிரியன் எனும் பெயரால் பிள்ளையாரும் அவருக்குப் பிடித்த கொழுக்கட்டையும் ஒன்று சேர நம் ஊரில் கொண்டாடப்படுகின்றன.
ஞானபலி எனும் பெரும்பசி கொண்ட பூதத்தை அழிக்க விஸ்வரூபம் எடுத்து வந்த விநாயகர் ஞானபலியை வென்று கொழுக்கட்டையாக்கி விழுங்கி விட்டதாகவும், இச்சம்பவத்தை நினைவுகூறும் விதமாகவும், பிள்ளையாரின் வயிற்றில் குடிகொண்ட ஞானபலியின் பசியைப் போக்கவும் விநாயகர் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யப்படுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
அதன்படி, வரும் விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் மற்றும் ஞானபலியின் வயிறு, உள்ளம் குளிர கொழுக்கட்டை செய்து படைப்பது எப்படி எனப் பார்க்கலாம்.
பிடி கொழுக்கட்டை
தேவையான பொருள்கள்
அரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1 கப்
ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை
வெல்லத்தை தண்ணீர் ஊற்றி உருக்கிக் கொள்ளுங்கள். அதை வடிகட்டி மீண்டும் கடாயில் ஊற்றி 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள். பின் தேங்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அரிசி மாவைக் கலந்து கட்டிகளின்றி கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் இறுகி கெட்டிப் பதத்தில் மாவு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
இப்போது மாவை சற்று ஆறவிட்டு சிறு சிறு உருண்டைகளாக எடுத்து நீள வாக்கில் பிடித்து வையுங்கள். பின்னர் அதனை இட்லி குக்கர் தட்டில் வைத்து வேக வையுங்கள். 15 நிமிடங்கள் போதும் வெந்துவிடும். இப்போது சுவையான பிடி கொழுக்கட்டை ரெடி
தேங்காய் பூரண கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – 1கப்,
வெல்லம் – 1 கப்.
தேங்காய் அளந்த பாத்திரத்தில் வெல்லத்தையும் நன்றாக பொடி செய்து, அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். (ஒரு கப் தேங்காய் துருவலில் 1/2 கப், தேங்காய் துருவல் சேர்த்து, மீதமுள்ள 1/2 கப் வேகவைத்த பாசிப்பருப்பையோ, கடலைப்பருப்பையோ கூட சேர்த்துக் கொள்ளலாம் )
செய்முறை
பூரணம்: கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, துருவிய தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வறுக்கவும். பொடி செய்து வைத்திருக்கும் வெல்லத்தையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு வெல்லம் கரைந்து அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும். இறுதியாக ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியை தூவி இறக்கவும்.
பூரணத்தில் எக்காரணத்தைக் கொண்டும் தண்ணீர் சேர்க்க வேண்டாம். வெல்லம் உருகிய தண்ணீரே பூரணத்துக்கு போதுமானது.
கொழுக்கட்டை
கொழுக்கட்டை மாவை கடாயில் போட்டு 2 நிமிடங்கள் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 2 கப் அளவு கொழுக்கட்டை மாவை அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் அதில், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் அளவு நெய் சேர்க்கவும். எந்தக் கப்பில் மாவை அளந்து எடுத்துக் கொண்டார்களோ அதே கப்பில் 2 கப் அளவு மாவுக்கு 2 கப் அளவு தண்ணீரை கொதிக்க விடவும்.
கொதிக்கின்ற தண்ணீரை அரிசி மாவில் கரண்டியால் நன்றாக கிளறி விடவும்.
மாவு, கை பொறுக்கும் பக்குவத்தில் வந்தவுடன் கைகளாலேயே மாவை பிசைந்து கையில் ஒட்டாத பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.
மாவின் சூடு சுத்தமாக ஆறுவதற்குள் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, பூரணத்தையும் உருண்டைப் பிடித்து, தேவையான வடிவத்தில் பூரணத்தை உள்ளே வைத்து, கொழுக்கட்டை செய்து இட்லி சட்டியில் வைத்து 5 நிமிடங்கள் ஆவியில் வைக்கவும். சுவையான கொழுக்கட்டை தயார்.
பால் கொழுக்கட்டை
தேவையான பொருள்கள்
அரிசி மாவு - 1/2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
செய்முறை
அரிசி மாவில் சிறிது உப்பு சேர்த்து கிளறவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பதத்துக்கு கொண்டு வரவும். பின் அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். வாணலியில் தண்ணீர் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பின் உருண்டைகளை போட வேண்டும்.
15 நிமிடத்துக்கு பின் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.10 நிமிடம் கழித்து தேங்காய் பால் மற்றும் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து 10 நிமிடம் கொதித்த பின் கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்.