ஆன்மீகம்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலம் - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
குடியாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அம்மன் சிரசு. வெகு விமர்சியாக நடைபெற்று வரும் குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழா. பாதுகாப்பு பணியில் 1700 காவல் துறையினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள கெங்கையம்மன் சிரசு திருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி நடைபெறும். குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிரசு ஊர்வலம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை காண உள்ளூர் வெளியூர் மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் குடியாத்தம் நகரில் குவிந்துள்ளனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் குடியாத்தம் நகரம் நிரம்பி வழிகிறது. இந்த சிரசு திருவிழாவிற்காக இன்று உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. தரணம் பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து புறப்படும் சிரசு 2 கிலோ மீட்டர்கள் ஊர்வலமாக சென்று கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள அம்மனின் உடலில் சிரசு பொறுத்தப்பட உள்ளது.
இந்த சிரசு திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்காக 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 13 துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 1,700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் முறையாக 2 பட்டாலியன் சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரின் வீதிகளில் சிரசு ஊர்வலம் வரும் போது பக்கதர்கள் தங்களது நேர்த்திக்கடனான மாலை அணிவித்தல் தேங்காய் உடைத்தல் போன்ற வழிபாடுகளில் ஈடுபட்டனர். மேலும், சிரசு மீது மாலை அணிவிக்கவும் அதனை தொட்டு வணங்கவும் பக்தர்கள் முந்தி அடிததுக்கொண்டு சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் மிகுந்த சிரமப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் இணைக்கும் முக்கிய பகுதியாக இருக்கும் குடியாத்தம் நகரில் எந்தவித போக்குவரத்து நெரிசலோ அல்லது பாதிப்போ ஏற்படாத வகையில் முக்கிய சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பு: புராணத்தில் கூறப்பட்டது போல அம்மனின் தலையை வெட்டியதால் மீண்டும் அம்மனின் மகன் தனது தாயின் உயிர் வேண்டுமென வரம் கேட்டதை தொடர்ந்து வெட்டுப்பட்ட கெங்கையம்மனின் தலை மாற்று உடலான வேலைக்கார பெண் உடலில் பொருத்தப்படுகிறது இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து தான் ஆண்டாண்டு காலமாக சிரசு திருவிழா நடைபெற்று வருகிறது.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.