Vaikunta Ekadasi: வைகுண்ட ஏகாதசி: இன்று தொடங்கியது திருமொழி திருவிழா... தங்கப்பல்லக்கில் சந்தன மண்டபம் வரும் பெருமாள்
Vaikunta Ekadasi: வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், ‘பூலோக வைகுண்டம்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் இறுதியிலும், தை மாதம் முதல் நாட்களிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடப்பது வழக்கம். பொதுவாக மார்கழி மாத சுக்கில பட்ச ஏகாதசி ஒவ்வொரு ஆண்டும் மாத தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வரும்.
பெருமாளுக்கு உகந்த மாதமான மார்கழியில் ஆண்டுதோறும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் ஆண்டுதோறும் நடைபெறும் திருஅத்யன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாள்கள் இந்த விழா நடைபெறும்.
சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி இந்த நாளில் பக்தர்களுக்கு தரிசனம் தரும் பெருமாளை இரவு முழுவதும் கண் விழித்தும், விரதமிருந்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
பூலோகம் முழுவதும் 108 வைணவ திருத்தலங்கள் இருந்த போதிலும் காவிரித்தாயின் மடியில் கொள்ளிடம் ஆற்றுத்தீவில் அமைந்திருப்பது ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயிலில் பொதுவாக 365 நாள்களுமே விழாக்களுக்கு பஞ்சமிருக்காது. வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை நடைபெறும் பெருமாள் புறப்பாட்டைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருவது வழக்கம்.
`வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று (டிச.23) தொடங்கியது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த விழாவில் காலை 7.15 மணி முதல் காலை 11.30 மணி வரை நம்பெருமாள் முன் நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்கள் இசையுடன் பாடப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வித்தியாசமான அலங்காரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10ஆவது நாளான வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார்.
ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான 2ஆம் தேதியே வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.
வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை நடைபெறும் பெருமாள் புறப்பாட்டைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருவது வழக்கம். இந்த புறப்பாட்டு நேரத்தில் பெருமாளை அருகிலிருந்து பார்க்க விரும்புபவர்களுக்கு சிறப்பு கட்டணமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நடை முறையில் இருந்த பெருமாள் புறப்பாட்டு நேர தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னதாகப் பேசிய இந்து சமய அறநிலை துறை “கடந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவின் போது கிளி மண்டபத்திலிருந்து தரிசனம் செய்ய ஒரு நபருக்கு ரூ.500 சந்தனு மண்டபத்தில் இருந்து ஊர்வலத்தை தரிசிக்க ரூ.3000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 500 லிருந்து ரூ.1000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ. 5000 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
சொர்க்கவாசல் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பின்னர் 8ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 9ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.