புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. இறுதிக்கட்டத்தை எட்டிய திருப்பணிகள்
தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளை மண்டல இணை ஆணையர் ஆய்வு செய்தார்.
தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது.
இந்த சிலையில் கோடை காலங்களில் முத்து, முத்தாக வியர்வை துளிகள் வெளியாகும் என்பது ஐதீகம். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்வதில்லை. பிற அபிஷேகத்துக்கான அம்பாளின் வலதுபுறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துர்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துர்க்கைக்கும், அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.
மூலவராக விளங்கும் புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். இக்கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சை பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிதம்பரம் என்று பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
மிகப் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகளுடன் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்றுக் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கி நடந்து வந்தன. கோயில் புனரமைப்பு, வர்ணம் பூசுதல் உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து வரும் 10-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பணிகள் பெருமளவில் முடிந்து விட்டது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் மாரியப்பன், உதவி ஆணையர் கவிதா ஆகியோர் கோயிலில் நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆய்வின் போது கோவில் செயல் அலுவலர் மணிகண்டன் உடன் இருந்தார்.
இக்கோயிலின் உட்புறம் வெல்லக் குளம் உள்ளது. உடம்பில் கட்டி அல்லது மரு உள்ளவர்கள் அன்னையை வேண்டி கொண்டு வெல்லத்தை கொண்டு வந்து இந்த குளத்தில் போடுவார்கள். வெல்லம் கரைவது போல் கட்டிகளும், பருக்களும் கரைந்து விடும் என பக்தர்கள் நம்புகின்றனர். வீட்டில் யாருக்காவது அம்மை நோய் கண்டால் இங்குள்ள உள் தொட்டி வெளித் தொட்டிகளுக்கு நீர் இறைத்து ஊற்றுவதாக வேண்டிக் கொண்டால் அம்மையின் உக்கிரம் படிப்படியாக குறைந்து அவர்கள் பூரண குணமாவது நிஜம். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த இக்கோவிலுக்கு விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வருவது உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலில் வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

