தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம் - தொடங்கிய யாகசாலை பூஜைகள்
தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள பிரபலமான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை ஒட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தஞ்சாவூர்: தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள பிரபலமான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை ஒட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரபலமான இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் நகரில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலுக்கு சென்றால் திருச்செந்தூரை போல முருகனின் அருள் இங்கும் குறையாமல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் முருகருக்கு ஏற்ற நாட்களில் அபிஷேகங்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
ராஜகோபுரத்தைக் கொண்டு இக்கோயில் உயர்ந்த தளத்தில் அமைந்துள்ளது. நுழைவாயிலில் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் உள்ளனர். முன் மண்டபத்தில் கொடி மரம், பலி பீடம், மயில் காணப்படுகின்றன. கொடி மரத்தின் கீழ் கொடி மர விநாயகர் உள்ளார். இடது புறம் நவக்கிரகங்களின் சன்னதி காணப்படுகிறது. அடுத்து உள்ளே உள்ள மண்டபத்திற்கு செல்லும் முன்பாக இரு புறமும் விநாயகர், முருகன் காணப்படுகின்றனர். கருவறையில் மூலவர் உள்ளார். முருகனுக்கு முன்னர் வேல் காணப்படுகிறது. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் இடது புறத்தில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி, அப்பர், ஞானசம்பந்தர், சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரின் உலோகத் திருமேனிகள் காணப்படுகின்றன. இம் மண்டபத்திற்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். வெளி திருச்சுற்றில் பின் புறம் காசி விசுவநாதர், விசாலாட்சி, விநாயகர், கஜலட்சுமி, துர்க்கை ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. காசி விசுவநாதருக்கு முன்பாக நந்தியும் பலி பீடமும் காணப்படுகின்றன. உள் திருச்சுற்றில் இடது புறம் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது.
இக்கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
நேற்று முன்தினம் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளங்கள் முழங்க முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு எடுத்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு முதல்கால யாகாசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும், இன்று காலை 8.45 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6.30 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் 10.15 மணிக்கு கும்பாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. 11.45 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.