![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தருமபுரம் ஆதீனம் வழங்கிய கல்வி காவலர் விருது - யாருக்கு தெரியுமா...?
சீர்காழி தமிழ்ச் சங்க தலைவரும், சமூக ஆர்வலருமான மார்கோனிக்கு கல்வி காவலர் விருதும், பொற்பதக்கமும் தருமபுரம் ஆதீன கர்த்தர் வழங்கி கௌரவித்துள்ளார்.
![தருமபுரம் ஆதீனம் வழங்கிய கல்வி காவலர் விருது - யாருக்கு தெரியுமா...? Mayiladuthurai Sirkali Tamil Sangam President Marconi honored by dharumapuram adheenam award of Education Guard - TNN தருமபுரம் ஆதீனம் வழங்கிய கல்வி காவலர் விருது - யாருக்கு தெரியுமா...?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/24/32ac914bac6a9f6f4d4cdf1fce7cfb471724483175953733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆச்சாள்புரத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் சீர்காழி தமிழ்ச் சங்க தலைவரும், சமூக ஆர்வலருமான மார்கோனிக்கு கல்வி காவலர் விருதும், பொற்பதக்கமும் வழங்கி தருமபுரம் ஆதீன கர்த்தர் வழங்கி கௌரவித்துள்ளார்.
சிவலோக தியாகராஜ சுவாமி கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த திருவென்னீற்றுமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சமயக்குறவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் திருமண கோலத்தில் காட்சியளித்த ஸ்தலமாகவும், துணைவியாருடன் சிவசோதியில் கலந்து அருளிய சிறப்புமிக்க கோயிலாக திகழ்கிறது.
14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16-ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 20-ம் தேதி முதல் காலை யாகசாலை பூஜையும் தொடங்கி நடைபெற்றது. இன்று 6-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கடங்கள் புறப்பாடு
தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, சிவ வாத்தியங்கள் மற்றும் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களை அடைந்தது. அதனை அடுத்து தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
குடமுழுக்கு நிகழ்வில் பங்கேற்க ஆதீனங்கள்
கும்பாபிஷேகத்தில் செங்கோல் ஆதீனம் 103 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள், சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28 வது குரு மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது மடாதிபதி நாகராஜ் சுவாமிகள், நாச்சியார் கோயில் ஆதீனம் குருமகா சந்நிதானம் சிவசுப்பிரமணிய தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண வைபவம்
அதனை தொடர்ந்து இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இக்கோயிலில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமாகிய இந்த ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில் நடைபெறும். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் திருவீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு ஊஞ்சல் உற்சவம் சேவிக்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள், தோத்திர பூர்ணாம்பிகைக்கு மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது . திருக்கல்யாண வைபவ நிகழ்வில் திரெளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கல்வி காவலர் விருதும், பொற்பதக்கமும்
மேலும் முன்னதாக தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அவர்களால் கல்வி காவலர் விருதும், பொற்பதக்கமும் சமூக ஆர்வலரும், சீர்காழி தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான மார்கோனிக்கு வழங்கி கௌரவித்தது பாராட்டு தெரிவித்தார். தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான மார்கோனி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் நிலையில், ஆன்மீகத்தில் உள்ள பற்றால் பல லட்சங்களில் கோயிலுக்கும் ஏராளமான திருப்பணி உள்ளிட்ட காரியங்களுக்கு உதவி வருகின்றார். நேற்று நடைபெற்ற ஆச்சாள்புரம் கோயில் கும்பாபிஷேக விழாவில் நடைபெற்ற அன்னதானத்திற்கு மட்டும் அவர் 13 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)