புரட்டாசி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்! மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் குவிந்த பக்தர்கள் - காரணம் என்ன?
புரட்டாசி மாத மஹாளய அமாவாசை முன்னிட்டு மயிலாடுதுறை புண்ணிய நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து ஏராளமானோர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை: புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை, இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கத் தவறியவர்கள், இந்த மஹாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் அளிப்பது வழக்கம். இந்த தினத்தில் தர்ப்பணம் அளித்தால், மறைந்த ஏழு தலைமுறையினருக்கும் தர்ப்பணம் சென்று சேரும் என்பது ஐதீகம். இந்த நம்பிக்கையின்படி, இன்று தமிழகம் முழுவதும் உள்ள புண்ணிய நதிகள், குளங்கள், கடற்கரைகள் ஆகியவற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் மற்றும் பலி கர்ம பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் பக்தர்கள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பதினாறு தீர்த்தக் கிணறுகளுடன் கூடிய உலகப் புகழ்பெற்ற காவிரி துலாக் கட்டம் மற்றும் ரிஷப தீர்த்தம், மஹாளய அமாவாசை வழிபாடுகளுக்கு மிகவும் உகந்த இடமாகக் கருதப்படுகிறது. கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் இங்கு நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்கொண்டதாகவும், பார்வதி தேவி மயிலுருவத்திலிருந்து விமோசனம் அடைந்ததாகவும் புராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க துலாக் கட்டத்தில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு, முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்தனர்.

காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்
தர்ப்பணம் அளித்த பொருட்களைப் புனித நீரில் கரைப்பது வழக்கம். காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தபோதிலும், பக்தர்கள் ஆர்வத்துடன் ஆற்றுக்குள் இறங்கி, பூஜை செய்யப்பட்ட பொருட்களை நீரின் ஓட்டத்தில் விட்டு வணங்கினர். பக்தர்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மயிலாடுதுறை காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.
பூம்புகார் காவிரி சங்கமத்தில் வழிபாடு
இதேபோல், மயிலாடுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புகழ்பெற்ற பூம்புகார் காவிரி சங்கமம் பகுதியிலும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். காவிரி ஆறு கடலுடன் சங்கமிக்கும் இந்த புனித இடத்தில், பக்தர்கள் அதிகாலையிலேயே வந்து தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்தனர். வழக்கத்தைவிட காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், பக்தர்கள் உற்சாகத்துடன் புனித நீராடினர்.

திருவெண்காடு புதன் ஸ்தலம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அக்னி, சூரியன் ,சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
இதில் சந்திர தீர்த்தக்குளம் அருகே பித்துருக்கள் உலகத்தின் தலைவர் என போற்றப்படும் ருத்ரனின் பாதம் அமைந்துள்ளது. இந்த ருத்ர பாதத்தில் பித்ருக்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து சந்திர தீர்த்த குளத்தில் நீராடி வழிபாடு செய்தால் 21 ஜென்ம பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை. இந்நிலையில் இன்று புரட்டாசி மாத மகாளய அம்மாவாசையை முன்னிட்டு ருத்ரபாதம் மண்டபத்தில் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுக்க வருகை புரிந்தனர். தொடர்ந்து மண்டபத்தை சுற்றிலும் பொதுமக்கள் அமர்ந்து குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தும் பலி கர்ம பூஜை செய்தும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவிலில் சுவாமி அம்பாளை வழிபட்டு செய்கின்றனர்.

மறைந்த முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் தருணம்
மஹாளய அமாவாசை என்பது, மறைந்த நம் முன்னோர்களுக்கு நன்றி செலுத்துவதற்கும், அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த நாளில் செய்யப்படும் தர்ப்பணம் மற்றும் வழிபாடுகள், தலைமுறை தலைமுறையாக நம் குடும்பத்திற்கு நன்மையையும், செழிப்பையும் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. இன்றைய தினம், இந்த புனித வழிபாடுகளை மேற்கொண்ட பக்தர்கள், தங்கள் மன அமைதியையும், ஆன்மிகத்திருப்தியையும் உணர்ந்தனர்.






















