Nattu Karthigai: நாட்டு கார்த்திகை தீபம் என்றால் என்ன ? ஏன் கொண்டாடப்படுகிறது ? எப்படி கொண்டாட வேண்டும் ?
Karthigai deepam: கார்த்திகை தீபத்தின் மூன்றாவது நாளான இன்று, நாட்டு கார்த்திகை விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
Karthigai Deepam - Nattu Karthigai : கார்த்திகை தீபத்தில் மூன்றாவது நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் நாட்டுக் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. நாட்டு கார்த்திகை விழா ஏன் கொண்டாடப்படுகிறது, எப்படி கொண்டாட வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
தமிழர்கள் கொண்டாடும் மிக முக்கிய விழாக்களின் ஒன்றாக கார்த்திகை தீபம் திருவிழா இருந்து வருகிறது. கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்கு ஏற்றி பொதுமக்கள் கொண்டாடுவார்கள். அதேபோன்று கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீபம் விழா மிக விமர்சையாக கொண்டாடும்.
கார்த்திகை தீபம் எத்தனை நாள் கொண்டாடப்படும் ?
கார்த்திகை தீப விழா பொதுவாக வீடுகளில் இக்காலகட்டத்தில் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் "நாட்டு கார்த்திகை" என அழைக்கப்படுகிறது. முதலில் கார்த்திகை தீபம் எத்தனை நாள் கொண்டாடப்படும் என தெரிந்து கொள்வோம்.
பாரம்பரியமாக கார்த்திகைக்கு முன்தினம் பரணி நட்சத்திரத்தன்று பரணி தீபம் ஏற்றப்படும். பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றி ஆதிசக்தியான காளி தேவியை வழிபடும் வழக்கம் உண்டு. அதற்கு அடுத்த நாள் கார்த்திகை தீபம் கொட்டப்படும். அதற்கு அடுத்த நாள் விஷ்ணு தீபம் ஏற்றப்படும். அதற்கு அடுத்த நாள் (நான்காம் நாள்) மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று கார்த்திகை சீர் கொடுக்கும் வழக்கம் முன்பெல்லாம் இருந்து வந்தது. பெண்ணையும் மருமகனையும் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து சீர் செய்து அனுப்பும் விழா நாட்டு கார்த்திகை தீபம் என சிறப்புப் பெற்றது. ஐந்தாவது நாள் இயற்கைக்கு நன்றி செல்லும் வகையில், தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக இருந்து வந்தது.
நாட்டு கார்த்திகை
தற்போது இந்த வழக்கம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் கிராமப்புறங்களில் கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் நாட்டு கார்த்திகை கொண்டாடப்படுகிறது. நாட்டு கார்த்திகை பண்டிகையின் போது, வடை, பாயாசம் மற்றும் கொழுக்கட்டையுடன் படையல் போட்டு, அரிசி மாவால் அகல் வடிவில் விளக்கு ( கொழுக்கட்டை போன்று ஆவி காட்டி செய்யப்படும் விளக்கு ) செய்து வீட்டில் விளக்கு ஏற்றி கிராமப்புறங்களில் இன்றும் வழிபாடு செய்கின்றனர்.
நாட்டு கார்த்திகை தீபத் திருவிழா நாளன்று அசைவம் எடுத்து, சாப்பிடும் பழக்கமும் பெரும்பாலான வீடுகளில் உள்ளன (கடவுளுக்கு அசைவம் படைக்க மாட்டார்கள்). அதேபோன்று நாட்டு கார்த்திகை தினத்தன்று, விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களிலும், மாடு வளர்ப்பவர்கள் அவர்களது மாட்டு கொட்டாய்கள் ஆகிய இடங்களில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவார்கள். நாட்டுக் கார்த்திகை கொண்டாடும் பெரும்பாலான வீடுகளில், மூன்றாவது நாளும் விளக்கு ஏற்றி இயற்கை நன்றி சொல்லும் பழக்கமும் இன்றும் தொடர்ந்து வருகிறது.
மாவளி சுற்றும் வழக்கம்
இன்றைய தினம் நாட்டு கார்த்திகை கொண்டாடப்படும் நாளில் தான், மாவளி சுற்றும் நிகழ்வும் நடைபெறும். நாட்டு கார்த்திகை தினத்தன்று மாவளி சுற்றும் நிகழ்ச்சி மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆண் பனை பூவை பயன்படுத்தி செய்யப்படும் மாவளி நாட்டு கார்த்திகை தீபத்தன்று, பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை சுற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர் பாரம்பரியத்தில் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.