Kandha Sashti Vizha:திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி விழா தொடக்கம்.. சூரசம்ஹாரம் எப்போது..? பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இன்று (நவம்பர் 13) முதல் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 13ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா 18ம்தேதி நடக்கிறது. 19ம்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. உலக பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகம், விடுதிகள், தனியார் விடுதிகள், சமுதாய விடுதிகளில் தங்கியிருந்து விரதமிருப்பது தனி சிறப்பாக கருதப்படுகிறது. இந்த விழா நடக்கும் 7 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடந்தாண்டை போலவே இந்தாண்டும் கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதி வழங்கப்படவில்லை.
கந்த புராணம்:
கந்த புராணத்தின் படி, ஒரு காலத்தில் சூரபத்மன், சிங்கமுகாசுரன் மற்றும் தாரகாசுரன் ஆகிய மூன்று அசுரர்கள் வான தேவதைகளுக்கு பெரும் தொல்லைகளை ஏற்படுத்தினார்கள். அவர்களை அழிக்க சண்முக பகவான் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து அவதாரம் எடுத்தார். முருகப்பெருமான் பார்வதி தேவியிடம் இருந்து வேல் ஆயுதத்தை (ஈட்டி ஆயுதம்) ஏற்றுக்கொண்டு, வீரபாகு தேவர் மற்றும் பிற தேவர்களுடன் சூரபத்மன் மற்றும் அவனது அரக்கர் படையுடன் போரிட திருச்செந்தூருக்கு சென்றார்.
போரின் போது முருகப்பெருமான் சிங்கமுகசுரத்தை சக்தி தேவியின் வாகனமாக மாற்றினார். சூரபத்மன் சண்டையிட்டுக் கொண்டு கடல் அடியில் மாமரமாக ஒளிந்து கொண்டு தப்பிக்க முயன்றான். முருகப்பெருமான் மாமரத்தைப் பிளந்து ஒரு பாதியை மயில் வாகனமாகவும், மற்றொரு பாதியை சேவல் கொடியாகவும் மாற்றினார். அசுரர்களை அழித்ததற்கும், தேவர்களை விடுவித்ததற்கும் பலனாக ஆண்டுதோறும் பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருப்பார்கள்.
கந்த சஷ்டி எப்போது? எந்தெந்த தினத்தில் என்னென்ன விசேஷம்?
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை தினத்தில் கந்த சஷ்டி தொடங்குகிறது.
- நவம்பர் 13 ( திங்கட்கிழமை) – கந்த சஷ்டி விழா தொடக்கம்
- நவம்பர் 14 ( செவ்வாய்) - முருகப்பெருமான் வேல் வாங்குதல்
- நவம்பர் 15 ( புதன்) - சூரபத்மனுக்கு தூது விடுதல்
- நவம்பர் 16 (வியாழன் ) - சூர்பத்மனுடான போர் தொடங்குதல்
- நவம்பர் 18 ( சனி) - சூரசம்ஹாரம்
- நவம்பர் 19 ( ஞாயிறு) - திருக்கல்யாணம்
இதைத் தொடர்ந்து, கோவில்களில் காலை முதல் மாலை வரை அனைத்து நாட்களிலும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறும். பக்தர்கள் ஆறு நாட்களிலும் கந்த புராணம் வாசிப்பார்கள், முருகப்பெருமானின் கீர்த்தனைகளைப் பாடுவார்கள், குறிப்பாக (கந்த சஸ்தி கவசம் பாடுவார்கள்.) தினமும் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை , தீபாராதனை நடைபெறும். சில கோவில்களில் முருகனுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.
லட்சார்ச்சனை என்றால் என்ன..?
நூறாயிரம் அர்ச்சனை என்பதே லட்சார்ச்சனை என்றும், சத சஹஸ்ர அர்ச்சனை என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக, கோயில்களில் வருஷத்துக்கு ஓரிருமுறை லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம்.