Chengalpattu Dasara: நூற்றாண்டு பழமையான செங்கல்பட்டு தசரா விழா.. படையெடுக்கும் மக்கள்... 10 நாளும் கொண்டாட்டம்தான்
Chengalpattu Dasara Festival 2024: நூற்றாண்டுகளைக் கடந்த செங்கல்பட்டு தசரா விழா இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது.
இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையாக வட இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில் நவராத்திரியின் கடைசி நாள் ஆயுத பூஜையாகவும், அதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகவும் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் நவராத்திரி தினத்தன்று, கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
செங்கல்பட்டு தசரா திருவிழா
இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுைற முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இதற்கு அடுத்த இடத்தில், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டில் கொண்டாடப்படும் தசரா திருவிழா மிக பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. செங்கல்பட்டு சின்னக்கடை வீதியில் ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி , 10 நாட்கள் நடைபெறும் தசரா விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், 127ம் ஆண்டு தசரா விழா வரும் இன்று, தொடங்கி 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு, சின்னம்மன் கோயில் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சின்னக்கடை வீதியில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தசரா விழா தொடங்குவது வழக்கமாக உள்ளது. மேலும் செங்கல்பட்டில் உள்ள, முக்கிய அம்மன் கோயில்களான முத்துமாரியம்மன், ஓசூர் அம்மன், சின்ன அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், உள்ளிட்ட கோயில்களில் கொலு நிறுத்தப்படுவது திருவிழாவின் முக்கிய அம்சமாக பார்க்க முடிகிறது. இதனையொட்டி தசரா நடைபெறும் சின்னக்கடை வீதியில் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் ராட்சத ராட்டினம், உணவு கூடங்கள் பொழுதுபோக்கு கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
விழாக்கோலத்தில் செங்கல்பட்டு
ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் கருமாரியம்மன், சாம்பவி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி, ஆதிபராசக்தி, லட்சுமி, வராகி, மகாலட்சுமி, சின்னம்மன் ஓசூர் அம்மன் என ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்கள் பக்தர்கள் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளிப்பார். செங்கல்பட்டு தசரா திருவிழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு நகர மக்கள், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம், வாலாஜாபாத், அச்சரப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியினர் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
வன்னி மரம் அம்பு எய்தல் நிகழ்வு
நவராத்திரி முடியும் இரவு சின்னக்கடை வீதியில் நகரம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் உள்ள சாமி சிலைகள் அனைத்திற்கும், துர்கா தேவி (பத்ரகாளி ) வேடமிட்டு திருத்தேர் வீதி உலா நகரம் முழுவதும் சுற்றி வரும். சின்ன கடை வீதியில் ஒன்றின் பின் ஒன்றாக 15 திருதேர் அலங்காரம் அணிவகுத்து அலங்கரித்து நிற்கும். பின்பு நள்ளிரவில் அங்கிருந்து அண்ணாசாலை வழியாக ராமபாளையம் பகுதிக்குச் சென்று, செங்கல்பட்டு தசராவில் முக்கிய நிகழ்வான மகிஷாசுரன் சூரசம்ஹாரம் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து வன்னி மரத்தில் "அம்பு எய்யும்" விழாவும் நடைபெறும். தசராவின் இறுதி நாளான, அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வன்னி மரத்தில் அம்பு எய்தும் நிகழ்ச்சியை செங்கல்பட்டு நோக்கி படையெடுப்பார்கள். இதனால் அன்றைய தினம் கூடுதலான மக்கள் தசரா திருவிழாவை காண கூடுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு தசரா விழாவை முன்னிட்டு மாவட்டம் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.