ஆடிப் பெருக்கு: கரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் புதிய கரன்சி நோட்டுகளால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
கரூரில் ஆடி 18 முன்னிட்டு வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்.
ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய நேர்த்திக்கடனில் செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் வழங்கிய ரூ.20 லட்சம் மதிப்பிலான புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் வேம்பு மாரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேம்பு மாரியம்மன் வெள்ளிக்கிழமை வாரம் தோறும் ஆடி மாதங்களில் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கு, ஆடி 18 முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்காரமான கரன்சி நோட் அலங்காரத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று கரன்சி நோட் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதிக்காக இந்த அலங்காரம் இரண்டு நாட்கள் வரை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத பௌர்ணமி பூஜையை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.