மேலும் அறிய
Aadi Perukku 2024: பசிலிகுட்டை முருகன் கோவில் ஆடிப்பெருக்கு திருவிழா!10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்
Aadi Perukku 2024: திருப்பத்தூர் வழியாக பசிலிகுட்டை செல்லும் சாலையில் பக்தர்கள் வழி நெடியிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பசிலிகுட்டை முருகன் கோவில் ஆடிப்பெருக்கு திருவிழா
Source : ABP Nadu Original
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி அறுபடை ஶ்ரீ முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 100 வருடங்களுக்கு மேலாக பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் ஆடி 1ஆம் தேதி முதல் 18 நாள்கள் விரதமிருந்து, ஆடிப்பெருக்கு அன்று காவடி எடுத்து, அழகு குத்தி முருகன் கோயிலுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கான இன்று சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் அழகு குத்தியும், தேர் இழுத்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் மொட்டை அடித்தும் அருகே உள்ள குளத்தில் குளித்துவிட்டு குன்றின் மேல் உச்சியில் உள்ள முருகனைக் கண்டு பக்தர்கள் அரோகரா என்று கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் வழியாக பசிலிகுட்டை செல்லும் சாலையில் பக்தர்கள் வழி நெடியிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இன்று மட்டும் சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் முருகனை தரிசனம் செய்ய வருவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















