‛போரையும், படையெடுப்பையும் நாடு அதிகம் பார்த்துவிட்டது; மக்கள் சகிக்க மாட்டார்கள்!’ -தலிபான்!
Taliban News: ‘உலகம் தற்போது பாடம் கற்றிருக்கும். இது கொண்டாடத்தக்க வெற்றி’ என்று லைவ் ஸ்ட்ரீம் ஒன்றில் தலிபன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான ஓடுதளத்தில் நடந்து, அமெரிக்க ராணுவத்தின் முழு வெளியேற்றத்தைத் தாலிபான் அமைப்பினர் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில், காபூலில் பள்ளிக்கூடங்கள் மாணவர்களால் நிரம்பியிருக்கின்றன. ‘எனக்கு தாலிபான்கள் மீது அச்சமில்லை. நான் எதற்கு அச்சம் கொள்ள வேண்டும்?’ எனக் காபூலில் தனியார் பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி மசூதா அசோஷியேட்டட் ப்ரெஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.
தாலிபான்கள் ஏற்கனவே மாணவர்களை பாலின அடிப்படையில் பிரித்து, தனித்தனியாக வகுப்பறைகளை அமைக்கவுள்ளனர். இந்த நடைமுறை ஏற்கனவே மேல்நிலைக் கல்விப் பள்ளிகளில் அமலில் உள்ளது. கடந்த ஞாயிறு அன்று, தாலிபான்களின் உயர்கல்வித் துறை அமைச்சர் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவர் எனவும், எனினும் இருபாலரும் இணைந்து கல்வி கற்கும் முறையைத் தடை செய்யவுள்ளதாக அறிவித்தார்.
”ஆப்கானிஸ்தான் மக்கள் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பாக உயர்கல்வி கற்கலாம். ஆண், பெண் இரு பாலர் இணைந்து கல்வி கற்பது தடை செய்யப்படும்” என்று தாலிபான் உயர்கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி தெரிவித்திருந்தார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கல்வி முறையில் இஸ்லாமிய, தேசிய, வரலாற்று அடிப்படையில் சீர்திருத்தம் செய்யப் போவதாகவும், மாணவர்கள் மற்ற நாட்டவருடன் போட்டியிடும் வகையில் அது அமையும் எனவும் ஹக்கானி தெரிவித்திருந்தார்.
பெண்களும், சமூக ஆர்வலர்களும் தலிபான்கள் கொடுத்துள்ள வாக்குறுதியை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தலிபான்கள் பெண்களின் முன்னேற்றம் குறித்த வளர்ச்சியை மதிப்பதாகவும், பெண்கள் தலிபான்களின் இஸ்லாமிய கொள்கை விளக்கங்களின் அடிப்படையில் நடத்தப்படுவர் எனவும் வாக்குறுதி அளித்திருந்தனர். பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட தலிபான் அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் மேற்குலக ஆதரவுடன் ஆட்சி செய்துகொண்டிருந்த முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அரசை வீழ்த்தி, ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர். கடந்த ஆட்சிக் காலத்தைப் போல அல்லாமல், தற்போதைய ஆட்சி வேறு வகையில் இருக்கும் என நாட்டைக் கட்டுப்படுத்தியவுடன் அறிவித்தனர் தலிபான்கள். கடந்த தலிபான்களின் ஆட்சிக் காலத்தில், பெண்களுக்குக் கல்வி தடை செய்யப்பட்டது. மேலும், ஆண் துணையின்றி, வீதிகளில் பெண்கள் நடமாடவும் தடை செய்யப்பட்டது. இதனை மீறுபவர்களுக்குப் பொது இடங்களில் அடித்தல் முதல் கல்லால் அடித்துக் கொலை செய்வது வரையிலான கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
தலிபான்கள் காபூல் விமான நிலையத்தைக் கைபற்றிய போது, அதனைக் கொண்டாட விளையாட்டாகத் துப்பாக்கிகள் சுடப்பட்டன. தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லாஹ் முஜாஹித் ‘உலகம் தற்போது பாடம் கற்றிருக்கும். இது கொண்டாடத்தக்க வெற்றி’ என்று லைவ் ஸ்ட்ரீம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முஜாஹித் விமான நிலையத்தில் கூடியிருந்த தனது படையினரிடம், “நாட்டு விவகாரங்களை அணுகும் போது, எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். நமது நாடு ஏற்கனவே போரையும், படையெடுப்புகளையும் அதிகமாகப் பார்த்துவிட்டது. நம் மக்களால் இனியும் சகித்துக் கொள்ள முடியாது” என்றும் கூறினார்.