George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி ஒருவர் கொலை செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் உலகம் முழுவதையும் உலுக்கியது. அங்கு மே 25-ஆம் தேதி காவல்துறை அதிகாரி ஒருவர் ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற நபரின் கழுத்து மீது கால் வைத்து நெருக்கி கொலைசெய்தார். இதை அங்கு இருந்த 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய மொபைல்ஃபோனில் இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ பின்பு சமூக வலைதளங்கில் பரவியது. அத்துடன் அந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முக்கியமான ஆதாரமாக அமைந்தது. மேலும் இச்சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வீடியோ பதிவை எடுத்த பெண்ணிற்கு தற்போது புலிட்சர் சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னல்லா ஃபிரேசர். இவர் அங்கு நின்று கொண்டிருந்தபோது இவ்வீடியோவை எடுத்துள்ளார். இந்த வீடியோ தான் பின்பு பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter) என்ற பெரிய இயக்கம் தொடங்க காரணமாக இருந்தது. அத்துடன் அமெரிக்காவில் இன்று நடைபெற்று வரும் இனவெறி தாக்குதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
Congratulations to #DarnellaFrazier. #Pulitzer pic.twitter.com/MdXk1Sspqo
— The Pulitzer Prizes (@PulitzerPrizes) June 11, 2021
இந்தச் சிறப்பான செயலை செய்ததற்காக அப்பெண்ணிற்கு பத்திரிகை துறையில் இந்தச் சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த புலிட்சர் விருதுகள் கருதப்படுகிறது. 1917-ஆம் ஆண்டு முதல் கலை, இலக்கியம், பத்திரிகை ஆகிய துறை சார்ந்தவர்களுக்கு புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தச்சூழலில் இப்பெண்ணிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக ஜார்ஜ் ஃபிளாயிட் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என்று கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஜார்ஜ் ஃபிளாயிட் குடும்பத்தினர் மற்றும் அமெரிக்க மக்கள் அனைவரும் மிகவும் வரவேற்றனர். இந்தாண்டிற்கான புலிட்சர் பரிசுகள் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி அறிவிக்கப்பட இருந்தது. எனினும் கொரோனா பாதிப்பு காரணமாக இதன் தேர்வாளர்கள் இணையதளம் மூலம் வெற்றியாளர்களை தீர்மானித்ததால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனால் நேற்று இந்த ஆண்டிற்கான புலிட்சர் பரிசுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !