பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு அசம்பாவிதம்… காவல்துறை அதிகாரி உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்!
"அந்த நபரை சோதனை செய்யும்போது ஏதோ சாக்குப்போக்கு கூறி வாகனத்தின் உள்ளே சென்றார், பின்னர் முன்னோக்கிச் சென்று தன்னைத்தானே வெடிக்கச் செய்தார்", என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மனித வெடுகுண்டு வெடித்த நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகமான டான் செய்தி வெளியிட்டுள்ளது.
மனித வெடிகுண்டு
இஸ்லாமாபாத்தின் காவல் துணைக் கண்காணிப்பாளர் சோஹைல் ஜாபர் சத்தா கூறுகையில், "பணியில் இருந்த போலீஸ்காரர் ஹெட் கான்ஸ்டபிள் அடீல் ஹுசைனும் அவரது சகாக்களும் காலை 10:15 மணியளவில் அப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண் இருந்த "சந்தேகத்திற்குரிய வாகனத்தை" கண்டுள்ளனர். போலீசார் வாகனத்தை நெருங்கி, அதை நிறுத்துமாறு கூறியதைத் தொடர்ந்து தம்பதியினர் காரில் இருந்து வெளியே வந்துள்ளனர். அதிகாரிகள் அந்த நபரை சோதனை செய்யத் தொடங்கிய நேரத்தில் அந்த நபர் ஏதோ சாக்குப்போக்குகூறி வாகனத்தின் உள்ளே சென்றார், பின்னர் முன்னோக்கிச் சென்று தன்னைத்தானே வெடிக்கச் செய்தார்", என்று செய்தி நிறுவனமான டானிடம் கூறினார்.
خود کش دھماکے میں ہیڈ کانسٹیبل عدیل حسین درجہ شہادت پر فائز ہوگئے۔
— Islamabad Police (@ICT_Police) December 23, 2022
اسلام آباد کیپیٹل پولیس کی بروقت کارروائی سے شہر دہشتگردی کے بڑے حملے سے محفوظ رہے۔
شھداء اور زخمی جوانوں کو قوم کا سلام۔ pic.twitter.com/EbPkkPPQn1
ஆறு பேர் காயம்
வாகனத்தில் இருந்து மனித வெடிகுண்டு வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்ததாக செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. காயமடைந்த ஆறு பேரில் இருவர் பொதுமக்கள் என்றும் நான்கு பேர் காவல்துறை அதிகாரிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைநகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) ஒரு அறிக்கையில் தெரிவித்து பொறுப்பெற்றுள்ளது.
காவல்துறை ட்வீட்
இஸ்லாமாபாத் காவல்துறை தனது ட்வீட்டில், காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்ததாகவும் கூறியது. “அதிகாரிகளுக்கு அருகில் கார் நின்றவுடன் வாகனத்தில் இருந்த தற்கொலைப் படை தீவிரவாதி தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டார்” என்று காவல் துறை தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பிரிவு I-10/4 க்கு கிழக்கே சர்வீஸ் சாலையில் இருபுறமும் போக்குவரத்தை மாற்றியமைத்தது மற்றும் பிரிவு I-10/4 க்கு மேற்கே சர்வீஸ் சாலையைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி உள்ளனர்.
آئی ٹین فور میں خود کش دھماکے کا معاملہ۔ pic.twitter.com/8sx4DfEZyJ
— Islamabad Police (@ICT_Police) December 23, 2022
தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான்
தலைநகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களிலும், பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களிலும் பாகிஸ்தான் குடிமக்கள் பகிர்ந்துள்ள காட்சிகள், வாகனம் தீப்பிடித்து எரிவதையும், சம்பவ இடத்தில் இருந்த போலீஸ்காரர்கள் மற்றும் பிற பொதுமக்களையும் காட்டியது.
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சந்தேகத்திற்கிடமான 2,024 நபர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களை பாம் ஸ்குவாட் கொண்டு சோதனை செய்ததாக இஸ்லாமாபாத் காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்த ஒரு நாளுக்குப் பிறகு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பன்னுவில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) காவலர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்ததை அடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைதி சீர்குலைந்து வருகிறது.