சிங்கள ஹீரோ... அதே மக்களால் ஜீரோ ஆன கதை... அறியாத அறியப்படாத பக்சவின் பாதை இது!
Mahinda Rajapaksa: மனித உரிமை போராளியாக அறியப்பட்ட மகிந்த ராஜபக்சேவின் அதிகாரங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, அவருடைய அணுகுமுறைகளும் மாற ஆரம்பித்ததாக அவருடன் நெருங்கி பழகிய பழைய நண்பர்கள் கூறுகின்றனர்.
மகிந்த ராஜபக்ச - தமிழ் பேசும் உலகில் மறக்கமுடியாத நபர். ஓர் இனத்தின் உரிமைக்காகப் போராடியவர்களின் குரலை மெளனிக்க செய்தவராக கூறப்படும் மகிந்த ராஜபக்ச, இலங்கையின் அசைக்கமுடியாத சக்தியாக, ஓரு பேரரசனாக வலம் வந்தவர். அதுவும், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைக்காக போராடியவர்களின் ஆயுதங்கள் அமைதியான பிறகு, விமானத்தில் இருந்து இறங்கி, மண்ணை முத்தமிட்டு, ராஜபக்ச நடந்துவந்த போது, அவரை தலையில் வைத்துக் கொண்டாடியது இலங்கையின் பெரும்பான்மையான சிங்கள மக்கள். ஆனால், இன்றோ, அதே பெரும்பான்மை மக்களால், தமது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என ஓடி ஓளிந்துவாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மகிந்த ராஜபக்ச.
ஓர் பத்திரிகையாளனாக, பலமுறை இலங்கைக்கு சென்று, ராஜபக்சவை பேட்டி கண்டவன் என்ற முறையில், அவரது ஆளுமை, செயல்திறன், சக போட்டியாளர்களைக் கையாளும் விதம், ஆட்சித்திறன் என அனைத்திலுமே உறுதியாக முடிவுகளை எடுக்கக்கூடியவர். அதற்கேற்ப, தமக்கு நம்பியானவர்களை, குறிப்பாக, தமது குடும்பத்தினரையே அதிகாரம்மிக்க பதவிகளில் வைத்திருப்பார். எனவேதான், மகிந்த ராஜபக்சேயின் ஆட்சியை, குடும்ப ஆட்சி என பலரும் விமர்சித்துள்ளனர்.
தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை மாகாணத்தின் வீரகெட்டிய எனும் கிராமத்தில் பிறந்து, சர்வதேசமும் கூர்ந்து கவனிக்கக்கூடிய சக்தியாக உருவெடுத்த மகிந்த ராஜபக்ச, யார் எப்படி விமர்சித்தாலும், தம் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரத்தையும் பெரும்பான்மை மக்களையும் வைத்திருந்தவர். அப்படிப்பட்டவர்தான், இன்று ஓடி ஒளிந்து, ராணுவத்தின் பாதுகாப்பில் மறைந்திருக்கிறார் ஏனெனில், இன்னும் அவர், பாதுகாப்புடன் வெளியே வந்து பேட்டிக்கூட கொடுக்கவில்லை என்பதால்தான் மறைந்திருக்கிறார் எனக் குறிப்பிடுகிறேன்.
1970-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக (MP) அரசியல் வாழ்க்கையில் நுழைந்து, அமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர், பிரதமர், அதிபர் என அதிகாரமிகு பதவிகளை வகித்தவர் மகிந்த ராஜபக்ச. இறுதிப்போரின் போது ஓரினத்தையே அழிக்கும் வகையில் மனித உரிமைகளுக்கு எதிராக, பல குற்றங்களைச் செய்த போர்க்குற்றவாளி என்றெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்படும் மகிந்த ராஜபக்ச, ஆரம்பத்தில் தொழிலாளர்கள் தலைவனாக, மனித உரிமை போராளியாக, தென்னிலங்கை மக்களுக்காக களமிறங்கிய புரட்சியாளர் என்றால், நம்புவது சற்று கடினம்தான்.. ஆனால், அதுதான் வரலாற்று உண்மை.
மனித உரிமை போராளியாக அறியப்பட்ட மகிந்த ராஜபக்சேவின் அதிகாரங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, அவருடைய அணுகுமுறைகளும் மாற ஆரம்பித்ததாக அவருடன் நெருங்கி பழகிய பழைய நண்பர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்குப்பிறகு, அவர் கேள்வியே கேட்க முடியாத சக்தியாக மாறிவிட்டார். தேர்தலில் அவர் தோல்வி அடைந்தாலும், சகோதரர் கோட்டாபய ராஜபக்சவுடன் சேர்ந்து, மீண்டும் வெற்றிப் பெற்று அதிகாரத்தில் இருந்தார். கொரோனாவின் கோவிட் 19 வைரஸால் சுற்றுலாத் தொழில் பாதிப்பு, அரசின் தவறான பொருளாதார முடிவுகள் – நடவடிக்கைகள் ஆகியவற்றால், வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது இலங்கை.
மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக்கூட வாங்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர் இலங்கைவாசிகள். இதனால், மக்கள் புரட்சி வெடித்து, ‛ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குப்போ’ என, வயது வித்தியாசமின்றி மக்கள் களமிறங்கினர் . இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்களை நசுக்க முயற்சித்த போது, அவரைத் தேர்ந்தெடுத்தவர்களே அவரை விரட்டி அடிக்கும் சூழல் ஏற்பட்டது; அவருக்கு சொந்தமான பல வீடுகளில் சில வீடுகள் தீக்கிரையாகின. அவரது பெற்றோரின் நினைவிடம் சின்னாபின்னமாக்கப்பட்டது. அரசனாக கோலோச்சியவர், தற்போது அட்ரஸ் இல்லாமல் ஆகியுள்ளார்.
துப்பாக்கி ஏந்திய போலிசார் - ராணுவத்தினரின் உதவியுடன், உயிர் பிழைத்தால் போதும் என தப்பியோடி, தற்போது இலங்கை கடற்படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக, ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது மகிந்த ராஜபக்ச மறைந்துக் கொண்டிருக்கும் திருகோணமலை கடற்படை முகாமில், போரின் இறுதிக்கட்டத்தின் போது, பல தமிழர்கள் அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அதே இடத்தில், தற்போது, தம்மை ஆதரித்த இனமே, தம்மை அழித்துவிடுமோ என உயிருக்குப் பயந்து குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இத்தனைக்கும் அவரது இளைய சகோதரன் கோட்டாபய ராஜபக்சதான் நாட்டின் அதிபர். இருப்பினும், பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா என்ற பாணியில், அவரை ஆதரித்தவர்களே, தற்போது எதிர்த்து துரத்தி அடித்தலால், சிங்கள ஹீரோவாக வலம் வந்தவர், தற்போது இலங்கையின் ஜீரோவாகிவிட்டார் என்றால் தவறில்லை. சட்டம் படித்து தேர்ந்த அரசியல்வாதியான மகிந்த ராஜபக்ச, தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் என அனைத்துவகை மக்கள்சக்தியின் முன் தற்போது தோலுரிக்கப்பட்டுவிட்டார் என்பதுதான் இலங்கையின் இன்றைய யதார்த்தம்.