Lancet Study: குழந்தைகளே உஷார்.. விஸ்வரூபம் எடுக்கும் உடல் பருமன் பிரச்னை.. லான்செட் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
குழந்தைகள், இளம் பருவத்தினர், இளைஞர்கள் என உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக மக்களிடையே பலவகை உடல்நல பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உடல் பருமன் அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், லான்செட் ஆய்வில் இது தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடல் பருமனால் பாதிக்கப்படும் குழந்தைகள்:
உலகளவில் இளைஞர்களை காட்டிலும் குழந்தைகளிடையேயும் இளம் பருவத்தினர் இடையேயும் உடல் பருமன் விகிதம் கூடுதலாக அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 1990 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டதில், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உடல் பருமன் 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே சமயம், இளைஞர்களிடையே உடல் பருமன் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
குழந்தைகள், இளம் பருவத்தினர், இளைஞர்கள் என உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம், 15 கோடியே 90 லட்சம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உடல் பருமனுடன் இருந்துள்ளனர். அதேபோல, 87 கோடியே 90 லட்சம் இளைஞர்கள் உடல் பருமத்துடன் இருந்துள்ளனர்.
லான்செட் ஆய்வில் அதிர்ச்சி தகவல்:
கடந்த 1990ஆம் ஆண்டு முதல், குறைந்த எடையுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் உடல் பருமன் என்பது மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையாக உள்ளது என லான்செட் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்புடன் இணைந்து என்சிடி ரிஸ்க் ஃபேக்டர் கோலாபரேசன் அமைப்பு, இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
22 கோடி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் எடை, உயரம் ஆகியவற்றை ஆராய்ந்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். 190 நாடுகளில் 1,500 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். கடந்த 1990ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை, உடல் பருமன் விகிதம் எந்தளவுக்கு மாறுபட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதற்காக, உடல் நிறை குறியீட்டெண்-ஐ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரையில், ஆய்வு முடிவுகளை மற்ற ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் எழுதியுள்ளனர். இந்தியாவில் சிறுமிகளின் உடல் பருமன் விகிதம் 0.1 சதவிகிதத்தில் இருந்து 3.1 ஆக உயர்ந்துள்ளது. சிறுவர்களின் உடல் பருமன் விகிதம் 0.1 சதவிகிதத்தில் இருந்து 3.9 ஆக உயர்ந்துள்ளது.
இளைஞர்களை பொறுத்தவரையில், பெண்களின் உடல் பருமன் விகிதம் 1.2 சதவிகிதத்தில் இருந்து 9.8 ஆக உயர்ந்துள்ளது. ஆண்களின் உடல் பருமன் விகிதம் 0.5 சதவிகிதத்தில் இருந்து 5.4 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: Mushroom Chukka: மட்டன் சுக்காவை மிஞ்சும் சுவையில் காளான் சுக்கா.. எளிமையான செய்முறை இதோ!