Karachi Attack: போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் - பாகிஸ்தானில் பயங்கரம்
பாகிஸ்தானின் கராச்சியில் காவல்நிலையத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் காவல் நிலையம் ஒன்றில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் தலிபான்கள்:
பாகிஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் அரசுடனான ஒரு மாத கால போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு அடுத்தடுத்து தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மசூதி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கிடையில் பாகிஸ்தானின் முன்னாள் தலைநகரான கராச்சி அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக திகழ்கிறது. இங்குள்ள ஷேரியா பைசல் பகுதியில் கராச்சி நகரத்திலிருந்து விமான நிலையத்திற்குச் செல்லும் பிரதான தமனி சாலைக்கு அருகில் காவல்துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
காவல்நிலையத்திற்குள் தீவிரவாதிகள் தாக்குதல்:
அங்கு நேற்று இரவு 7.10 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் முதலில் அரை டஜன் கைக்குண்டுகளை காவல்துறை தலைமை அலுவகத்துக்குள் வீசியுள்ளனர். இதனால் ஏற்பட்ட களேபரத்தில் என்ன நடக்கிறது என போலீசார் யூகிப்பதற்குள் உள்ளே நுழைந்த தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் ஐந்து தீவிரவாதிகள், 3 போலீசார் மற்றும் ஒரு பொதுமக்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆனால் உள்ளூர் ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகளில் மூவர் கொல்லப்பட்டதாகவும், இருவர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறை தலைமை அலுவலக கட்டிடத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சரமாரி தாக்குதல்:
கிட்டதட்ட 4 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் முடிவதற்குள் அருகில் அமைந்துள்ள சதார் காவல் நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்த போலீசார் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த சிந்து மாகாண முதலமைச்சர் முராத் அலி ஷா, இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என தெரிவித்ததுடன் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புக்கு தேவையான போலீசாரை அனுப்புமாறு டிஐஜிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.