விலகாத மர்மம்: ஏரியில் கண்டெடுக்கப்பட்ட இந்திய அமெரிக்க வம்சாவளி பொறியாளரின் உடல்... நடந்தது என்ன?
கடந்த 9ஆம் தேதி, காணாமல் போன இந்திய அமெரிக்க வம்சாவளி பொறியாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அமெரிக்க மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஏரியில் இந்திய அமெரிக்க வம்சாவளி மென்பொருள் பொறியாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இவர், கடந்த 9ஆம் தேதி காணாமல் போயுள்ளார். மேரிலாந்து ஜெர்மன் நகரில் உள்ள சர்ச்சில் ஏரியில் அங்கித் பாகாயின் உடலை அதிகாரிகள் கண்டெடுத்தனர். ஏரியில் ஒருவரின் உடல் மிதந்து கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கவனித்துள்ளனர்.
விலகாத மர்மம்:
இதையடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மாண்ட்கோமெரி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9ஆம் தேதி காலை 11.30 மணியளவில், மைல்ஸ்டோன் பிளாசாவுக்கு அருகிலுள்ள ஒரு சிகிச்சை மையத்தை விட்டு வெளியேறியபோது அங்கித் பாகாயை கடைசியை கண்டுள்ளனர். அதன் பிறகு, அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
வர்ஜீனியா அல்லது வாஷிங்டனுக்கு அவர் சென்றிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் நம்பி கொண்டிருந்தனர். அங்கித் பாகாயின் குடும்பத்தினர் உள்ளூர் காவல் நிலையத்தில் தேடத் தொடங்கினர். பொதுவெளியில், அவர் கடைசியாக பார்க்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் உள்பட பல இடங்களுக்கு அவரது குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
ஏரியில் கண்டெடுக்கப்பட்ட இந்திய அமெரிக்க வம்சாவளி பொறியாளரின் உடல்:
எதாவது தகவல் தெரிந்துவிடுமா என எண்ணி, அங்கித் பாகாய் காணவில்லை என சென்ற இடத்தில் எல்லாம் போஸ்டர் ஓட்டி சென்றள்ளனர் அவரது குடும்பத்தினர்.
இதுகுறித்து அங்கித் பாகாயின் மைத்துனர் கோபிந்த் சிங் கூறுகையில், "பாகாய் காணாமல் போன அதே நாளில், சர்ச்சில் ஏரியில் ஒரு நபரின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதை சோனார் பயன்படுத்தி, இழுவை கொக்கிகளைப் பயன்படுத்தி தேடினார்கள்" என்றார்.
வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அன்கித் பாகாய் பல உயிர்காக்கும் மருந்துகளை எடுத்து வந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தகவல் கூறுகின்றனர். மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த மரணத்தில் எந்த சந்தேகமும் எழவில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
விபத்தில் இந்திய வம்சாவளி உயிரிழப்பு:
சமீபத்தில், அமெரிக்க விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார். பாஸ்டனில் உள்ள லோகன் சர்வதேச விமான நிலையத்தில் நண்பருக்காக காத்திருந்தபோது பேருந்து மோதியதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 47 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் விஸ்வசந்த் கொல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் டகேடா மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இந்த சம்பவம் மார்ச் 28 அன்று மாலை 5 மணியளவில் நடந்தது.