Bill Gates | ”மெலிண்டா மிகச்சிறந்த நபர்” - திருமணம், கூடா நட்பு, பாலியல் குற்றச்சாட்டு: மனம் திறந்த பில்கேட்ஸ்..
பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் தம்பதியின் 27 ஆண்டுகால திருமண உறவு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் தம்பதியின் 27 ஆண்டுகால திருமண உறவு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சிஎன்என் செய்தி நிறுவனத்தின் ஆண்டர்சன் கூப்பருடன் மனம் திறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பில் கேட்ஸ் பல்வேறு விஷயங்கள் குறித்தும் மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். மெலிண்டாவுடனான திருமண முறிவு, ஜெஃப்ரி எப்ஸ்டெய்னுடனான சர்ச்சைக்குரிய நட்பு, பாலியல் குற்றச்சாட்டுகள் என அனைத்துக்கும் அவர் வெளிப்படையாகவே பதிலளித்துள்ளார்.
மிக சோகமான மைல்கல்..
தனது திருமண உறவு முறிவு குறித்துப் பேசிய பில் கேட்ஸ், "இது ஒரு சோகமான மைல்கல். மெலிண்டா ஒரு சிறந்த நபர். எங்களுக்குள்ளான பந்தம் முடிவுக்கு வருவது தனிப்பட்ட முறையில் இருவருக்குமே பெரும் சோகத்தைத்தான் தருகிறது. இருப்பினும், தொண்டு நிறுவனம் தொடர்பான பணிகளுக்காக இருவரும் பேசித் தொடர்பில் இருக்கிறோம். இரண்டாண்டு காலம்வரை இருவரும் இணைந்து பணியாற்றுவோம். இது ஒரு சோதனை முயற்சி. இந்த இரண்டாண்டுகளில் ஒன்றாகப் பணிபுரிவது சிரமமாக இருந்தால் மெலிண்டா தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவார். நாங்கள் இருவருமே எப்போதுமே இணைந்து பணியாற்றுவதை மகிழ்ச்சியுடன் மேற்கொண்டுள்ளோம். தொண்டு நிறுவனத்துக்கான சிறந்த பணிகளை இனியும் செய்வோம் என நான் நம்புகிறேன்" என்று கூறினார்.
அது ஒரு பெருந் தவறு..
ஜெஃப்ரி எப்ஸ்டெய்ன் உடனான தனது நட்பு குறித்து பேசிய பில் கேட்ஸ், "அது ஒரு பெருந்தவறு. நான் அவரை முழுமையாக நம்பினேன். ஜெஃப்ரி எப்ஸ்டெய்ன் நிதி மேலாண்மைப் பணியில் இருந்தார். அவருக்குப் பெரும் பணக்காரர்கள், உலகத் தலைவர்களின் நட்பு இருந்தது. நான் ஜெஃப்ரியுடன் பலமுறை இரவு உணவுக்காக வெளியில் சென்றுள்ளேன். அப்போதெல்லாம், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் தொண்டு நிறுவனத்துக்காக நிறைய காரியம் சாதிக்க முடியும் என நினைத்தேன். அவரை நம்பினேன். ஆனால், அவர் பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உயிரிழந்துள்ளார்" என்று தெரிவித்தார்.
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டெய்னுடன் பில்கேட்ஸ் நெருங்கிய உறவு பாராட்டியதுதான் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பிரிய முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஜெஃப்ரி எப்ஸ்டெய்ன், கடந்த 2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.
பாடம் கற்றுக் கொள்ளப்படும்..
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த பில்கேட்ஸ், "நடந்த தவறுகளுக்கு நிச்சயமாக வருந்தவேண்டும். ஆனால், இது உள்ளிருந்து தன்னை ஒழுங்குபடுத்தும் நேரம். இத்தருணத்தில் நான் முன்னோக்கிச் செல்ல விரும்புகிறேன். எனது பணிதான் எனக்கு மிகவும் முக்கியம். குடும்பத்துக்குள் ஏற்படும் சலசலப்புகள் ஆறிவிடும். நாம் செய்யும் தவற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம்" என்று கூறினார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றி பல பெண்கள் பில்கேட்ஸ் மீது கூறிய பாலியல் புகார்கள் தொடர்பான கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.