அதிபர் எச்சரிக்கை விடுத்தும் நிற்காத துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்..!
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் நேற்று பிற்பகுதியில் வால்மார்ட் கடையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் நேற்று பிற்பகுதியில் வால்மார்ட் கடையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நன்றி தெரிவிக்கும் விடுமுறை நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், செசபீக் நகரில் இந்த கொடூர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
கொலராடோவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான இரவு விடுதியில் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர்.
இதை தொடர்ந்து, வெறுப்பு சம்பவங்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் பைடன் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நின்றபாடில்லை.
Walmart shooting in Chesapeake, Virginia update:
— philip lewis (@Phil_Lewis_) November 23, 2022
-6 victims have died; 4 are currently in the hospital (conditions unknown)
-Authorities believe suspect died of a self-inflicted gunshot wound
-The shooter was an employee of Walmart
- Suspect was male pic.twitter.com/7RVxCuPRIL
சமீபத்தில்தான், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.
அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.