விழுப்புரத்தில் பம்பை - உடுக்கை இசைத்து, நடனமாடி கோரிக்கை வைத்த நாட்டுப்புற கலைஞர்கள்
விழுப்புரதில் தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கம் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பம்பை - உடுக்கை இசைத்து, நடனமாடி கோரிக்கை வைத்த நாட்டுப்புற கலைஞர்கள்.
தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கம் மற்றும் விழுப்புரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பம்பை உடுக்கை சிலம்பம் கலைஞர்கள் நலச் சங்கத்தின் 3-ம் ஆண்டு துவக்க கலை விழா விழுப்புரத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பம்பை உடுக்கை சிலம்பம் கலைஞரின் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, தஞ்சாவூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பம்பை, உடுக்கை, சிலம்பு உள்ளிட்ட 100 க்கணக்கான கலைஞர்கள் கலந்துக் கொண்டனர். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கப்பட்டது. பம்பை, உடுக்கை, கை சிலம்புடன் பல வேடங்கள் அணிந்தும், பலர் அம்மன் வேடங்கள் அணிந்தும், கைச்சிலம்பு, இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைத்தவாறும் ஊர்வலமாக சென்றனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக இசைக்கருவிகளை வாசித்து, நடனம் ஆடிச் சென்ற கலைஞர்கள் ஆஞ்சநேயர் திருமண மண்டபத்தை அடைந்தனர். நாட்டுப்புறக் கலைஞர்களான வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான சட்ட வழி முறைகள் கடுமையாக இருப்பதால் அவற்றை எளிமையாக்கி உடனுக்குடன் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதாக மாநில தலைவர் சத்யராஜ் கூறினார். மேலும் நாட்டுபுற இசை கலைஞர்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கியதற்கு நாட்டுபுற கலைஞர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்
அரசாணை (நிலை) எண் 171, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, நாள் 26.07.2012ல் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய நிர்வாகச் செலவினங்களுக்காக ஆண்டொன்றுக்கு ரூ.10.00 இலட்சம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிட ஆண்டொன்றுக்கு ரூ.25.00 இலட்சம் என மொத்த மானியமாக நிர்ணயம் செய்து அரசு ஆணையிட்டது.
அரசாணை (நிலை) எண் 132, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, நாள் 17.09.2019ல் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு பிற அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. அவ்வகையில், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களுக்கு மூக்குக்கண்ணாடி, கல்வி நிதியுதவி, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கருக்கலைப்பு / கருச்சிதைவு நிதியுதவி, இயற்கை மரணம் / ஈமச்சடங்கிற்கான நிதியுதவி, விபத்து மரண உதவித் தொகை ஆகிய நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
18 வயது முடிவடைந்த ஆனால் 60 வயது முடிவடையாத நாட்டுப்புறக் கலைஞர் ஒருவர் உறுப்பினராவதற்குத் தன்னுடைய பெயரை வாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கலைஞர்களிடம் பதிவுக்கட்டணமாக ரூ. 100/-ம், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் கட்டணமாக ரூ. 10/- மற்றும் அடையாள அட்டைகள் காணாமல் போனால் இரண்டாம்படி அடையாள அட்டை வழங்க ரூ. 20/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தங்கள் மாவட்டம் அமைந்துள்ள கலை பண்பாட்டுத் துறையின் மண்டல அலுவலகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் சென்னையில் உள்ள கலை பண்பாட்டு இயக்ககத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் வாரியத்தில் இதுநாள்வரை 50,882 கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உறுப்பினராகப் பதிவுபெற்ற 9,011 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காக இதுநாள்வரை ரூ.1,98,72,917/-வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய தேவையான விவரங்கள்
1. விண்ணப்பத்துடன் இருப்பிடம், வயது, குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான ஆவணங்கள் (குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை போன்றவை)
2. கலைஞர்கள் என்பதற்கான ஆதாரம் (கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட சான்று)
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 3
4. கலைஞர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான புகைப்பட அத்தாட்சி
5. பதிவு கட்டணம் - ரூ.100/