விழுப்புரம் மாவட்டத்தில் "புதுமைப்பெண் திட்டம்” மூலம் 2ம் கட்டமாக 3,222 மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை
புதுமைப்பெண் திட்டம்” மூலம், இரண்டாம் கட்டமாக 72 கல்லூரிகளில் பயிலும் 3,222 மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ‘புதுமைப்பெண் திட்டம்” மூலம் கல்லூரிகளில் பயிலும் 7396 மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை சென்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ‘புதுமைப்பெண் திட்டம்” மூலம், இரண்டாம் கட்டமாக உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்ததை முன்னிட்டு, விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் சி.பழனி அவர்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000- ஊக்கத்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை (Debit Card) வழங்கினார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் பெண்களின் பங்கு இருந்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மிகவும் குறிப்பிடத்தக்கதும், பாராட்டத்தக்க திட்டங்களுள் ஒன்று ‘புதுமைப்பெண் திட்டம்” ஒன்றாகும். இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.09.2022 அன்று முதற்கட்டமாக துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் மூலம், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் 56 கல்லூரியைச் சார்ந்த 2,3 மற்றும் 4-ஆம் ஆண்டுகளில் படிக்கும் 4,174 மாணவிகளுக்கு ரூ.2,08,70,000/- வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ‘புதுமைப் பெண்” திட்டத்தின்கீழ், இரண்டாம் கட்டமாக, முதலாமாண்டு மற்றும் விடுபட்ட மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்ததை முன்னிட்டு,
விழுப்புரம் மாவட்டத்தில், 72 கல்லூரிகளில் பயிலும் 3,222 மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. தொடக்க நிகழ்வாக, இன்றைய தினம் 5 கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில், மாணவர்கள் கல்வி கற்றிடும் வகையில், மதிய உணவு இலவச சீருடை, புத்தகம், விலையில்லா மிதிவண்டி போன்றவை வழங்கப்பட்டு வருவதால், பல்வேறு கிராமப்புற பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இதுபோன்ற திட்டங்கள் கல்லூரிகளில் இல்லாத காரணத்தில் மாணவியர்கள் பெருமளவில் கல்வி கற்க முடியாத சூழ்நிலை இருந்து வந்ததை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவியர்கள் உயர்கல்வி கற்றிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ‘புதுமைப்பெண் திட்டம்” செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கிராமப்புற மாணவியர்கள் பெருமளவில் தற்பொழுது ஆர்வத்துடன் உயர்கல்வி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கொண்டு வரப்பட்ட இச்சிறப்பான திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவியர்கள் ஊக்கத்தொகையினை நல்ல முறையில் பயன்படுத்தி, நன்கு கல்வி கற்று, அனைத்துத்துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சமவாய்ப்பினை பெற்று சிறப்பான எதிர்காலத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி கூறினார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்