பிரதமர் மோடியின் தாயார், நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை வைத்த பாஜகவினர் - எங்கு தெரியுமா..?
மயிலம் அருகே பிரதமர் மோடியின் தாயார் மற்றும் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தழுதாளி கிராமத்தில் பிரதமர் மோடியின் தாயார் மற்றும் நடிகர் மாரிமுத்துவிற்கு பாஜகவினர் சிலை வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தழுதாளி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஓம் விஜய மீனாட்சி உடனமர் சுந்தரேஸ்வரர் எமகண்டேஸ்வரர் யோகா நோய் தீர்க்கும் சமத்துவ கலை கோயில். இங்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இறைவனடி சேர்ந்த ஹீராபென் மோடி அவர்களின் திருவுருவ சிலை புதுச்சேரி பாஜக பிரமுகர் விக்கி (எ) ராஜகணபதி அவர்களின் சொந்த செலவில் நிறுவப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைமாமணி ஜாக்குவார் தங்கம் சிலையை திறந்து வைத்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சன் டிவி புகழ் எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன் (மாரிமுத்து) அவர்களின் திருஉருவ சிலையும் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஆர்த்தார் நீத்ம வேள்வி பூஜை செய்து அவர்களின் ஆன்மா சாந்தி அடைய சிறப்பு பூஜையும் செய்யப்பட்டு அறுசுவை அன்னதான உணவு சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
நடிகர் மாரிமுத்து :-
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ‘பரியேறும் பெருமாள்’, ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார்.
கடந்த மாதம் 8ம் தேதி காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்த போது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா மருத்துவமனைக்கு மாரிமுத்து கொண்டு செல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து, அவரது உடல் சொந்த ஊரான தேனி வருசநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.
பிரதமர் மோடி தாயார் மறைவு:-
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயை சந்தித்தார். குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி, காந்திநகரில் உள்ள தனது தாயாரின் இல்லத்திற்குச் சென்ற மோடி, அங்கு தேர்தலுக்கு முன் ஆசி பெற்றார். முன்னதாக, ஜூன் 18 ஆம் தேதி ஹீராபெனின் 100வது பிறந்தநாளில் பிரதமருடன் நேரத்தை செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.