பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்... விசிக மாநாட்டில் நடந்த கலவரம்
மாநாட்டு பந்தல் முன் வாகனத்தை ஓட்டி வந்த போது, காவல் ஆய்வாளர் பிரபாவதி, வாகனத்தை தடுத்து நிறுத்திய போது, விசிக ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் அவரைப் பிடித்து தள்ளிவிட்டனர்.
மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். இந்த மது ஒழிப்பு மாநாட்டில், அரசமைப்புச் சட்டம் 47-இல் கூறியபடி மதுவிலக்குச் சட்டத்தை இயற்ற வேண்டும். மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்பவை உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்:
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நான்கு சக்கர வாகனத்தில் போக்குவரத்து விதிகளுக்கு முரணாகவும், மாநாட்டு பந்தல் முன் வாகனத்தை ஓட்டி வந்த போது, அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் பிரபாவதி, வாகனத்தை தடுத்து நிறுத்திய போது, விசிக ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் அவரைப் பிடித்து தள்ளிவிட்டு நிலை குலையச் செய்தனர். இதனால் பெண் ஆய்வாளர் கீழே விழந்தார். அருகில் வேறு காவலர்கள் யாரும் இல்லாததால், அவர் யாரும் காப்பாற்றவும் ஆளில்லாமல் தனிமையில் தவித்தார். பின்னர் விசிகவினரோ கோஷமிட்டவாறு அங்கிருந்து புறப்பட்டனர்.
நெரிசலில் சிக்கி தவித்த பெண்கள்
மாநாட்டில் மகளிர் கட்சி நிர்வாகிகள் அமருவதற்கு தடுப்புகள் அமைத்து 50 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இருக்கைகள் முழுவதுமாக நிரம்பியதால் இருக்கைகள் இல்லாமல் இருந்த தொண்டர்கள் மாநாடு திடல் மேடைக்கு அருகே வராமல் இருக்க தடுப்புகள் அமைக்கபட்டிருந்த கம்பிகளை தள்ளிவிட்டு மேடைக்கு அருகே செல்ல முயன்றனர் அப்போது தொண்டர்களை போலீசாரும், பவுன்சர்கள் தடுக்க முயன்றபோதும் முயலாததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவலர்களையும் பவுன்சர்களையும் தள்ளிவிட்டு தொண்டர்கள் ஆர்பரித்து மேடைக்கு அருகே சென்றபோது பெண்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். அப்போது பவுன்சர்களின் கால் இடுக்குகள் வழியாக தொண்டர்கள் மேடைக்கு அருகே சென்றதால் அவர்களை கட்டுபடுத்த முடியாமல் திகைத்து சென்றனர். கட்சியின் தலைவர் திருமாவளவனை அருகில் பார்க்க சிலர் ஸ்பீக்கர் அமைக்கப்ட்டிருந்த கம்பிகள் மேல் ஏறி ஆபத்தான நிலையில் மாநாட்டில் திருமாவளவன் பேசுவதை கண்டு ரசித்தனர்.