கணக்கெடுப்பு பணியினை சரிவர மேற்கொள்ளாத ஊராட்சி செயலர் பணியிட மாற்றம் - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி
அனைவருக்கும் வீடு திட்டத்தின், கணக்கெடுப்பு பணியினை சரிவர மேற்கொள்ளாத ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் உத்தரவு

அனைவருக்கும் வீடு திட்டத்தின், கணக்கெடுப்பு பணியினை சரிவர மேற்கொள்ளாத ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் புதிய கணக்கெடுப்பு பணி 12.12.2022 முதல் 06.01.2023 வரை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, இப்பணியின் முன்னேற்றம் குறித்து, (14.12.2022) கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்களுடன், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எண்ணாயிரம் ஊராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அனைவருக்கும் வீடு கணக்கெடுக்கும் பணியினை ஆய்வு செய்தபோது, எண்ணாயிரம் ஊராட்சி செயலர் குப்புசாமி அவர்கள், ஏற்கனவே அரசுதிட்டத்தில் பயனடைந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் வீடு வழங்கிடும் பொருட்டு கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டதை ஆய்வின்போது கண்டறியப்பட்டது. அதனால், அரசின் பயன்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்று சேராத நிலை ஏற்படுகிறது எனவும், தனது பணியினை சரிவர மேற்கொள்ளாத எண்ணாயிரம் ஊராட்சி செயலர் குப்புசாமி அவர்களை கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் கள்ளப்பட்டு ஊராட்சிக்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.





















