புதுச்சேரியில் கோயில் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் - ஆளுநர் தமிழிசையிடம் கோரிக்கை மனு
’’பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள நிலையிலும், இவை அனைத்தும் மிகக் குறைந்த வாடகைக்கு பல ஆண்டுகளாக அரசியல் பின்பலம் உள்ள நபர்கள் வசம் உள்ளதாக புகார்’’
புதுச்சேரியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் கணக்குகளை அரசு தணிக்கை செய்யாத அவலம் நீடிக்கிறது, கோயில் தணிக்கைப்பிரிவில் கண்காணிப்பாளர் உட்பட 5 பதவிகள் காலியாக உள்ள சூழலில் ஒரேயொரு உதவியாளருடன் மட்டுமே இயங்குகிறது, இதனால் கோமா நிலையில் இந்து அறநிலையத்துறை இருப்பதாக ஆளுநர், முதல்வரிடம் ஆர்டிஐ தகவலுடன் புகார் தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 243 கோயில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், வீடுகள், கடைகள், காலிமனைகள் என உள்ளன. இவற்றின் மூலம் வரும் வருமானங்கள் மற்றும் கோயில் உண்டியல்கள் மூலம் வரும் வருமானங்கள் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்ய கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கோயில் தணிக்கை பிரிவு செயல்பட்டு வருகிறது.
கோயில்கள் தணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பித்து தகவல் கேட்டபோது பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் கணக்குகள் தணிக்கை செய்யப்படாதது தெரிந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கு புகார் தந்துள்ள ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறியதாவது: ஆர்டிஐயில் விண்ணப்பித்தபோது கோயில் தணிக்கைப்பிரிவில் ஒரேயொரு உதவியாளர் மட்டுமே பணியில் உள்ளார். ஒரு கண்காணிப்பாளர் இரண்டு உதவியாளர், ஒரு மேனிலை எழுத்தர், ஒரு பல்நோக்கு உதவியாளர் பணி இடங்கள் காலியாக உள்ளன. அதனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோயில்களில் எதுவும் தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்று தகவல்கள் தந்துள்ளனர்.
பல கோடி செலவு செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புதுச்சேரி மணக்குள விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், வேதபுரீஸ்வரர், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், வரதராஜபெருமாள், காசிவிஸ்வநாதர் ஆகிய கோயில்களுக்கான கும்பாபிஷேக வரவு - செலவு கணக்கைக்கூட பல ஆண்டுகளாக அரசு தணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்காததும் ஆர்டிஐயில் தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே தணிக்கை செய்த வகையில் அரசுக்கு கோயில்கள் ரூ.32,95,115 லட்சம் நிலுவைத் தொகை செலுத்தாமல் உள்ளனர். குறிப்பாக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் ரூ.14,54,782 நிலுவை தொகை வைத்துள்ளதாக ஆர்டிஐயில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்து சமய அறநிலையத்துறை மீது புதுச்சேரி அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையினர் கோயில்களின் பல கோடி சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையிலும், சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், கோயில் நிர்வாகத்திலும் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை எதை பற்றியும் கவலைப்படாமல் கோமா நிலையில் உள்ளது போல் தெரிகிறது.
புதுச்சேரியில் உள்ள கோயில்கள் அனைத்திற்கும் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள நிலையிலும், இவை அனைத்தும் மிகக் குறைந்த வாடகைக்கு பல ஆண்டுகளாக அரசியல் பின்பலம் உள்ள நபர்கள் வசம் உள்ளது. பல இடங்கள் கோயில் நிர்வாகத்திற்கே தெரியாமல் முறைகேடாக பலர் பயன்பாட்டில் உள்ளது. இதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு உள்ள கோயில்கள் மற்றும் பல ஆண்டுகளாக ஒருவரே தொடர்ந்து நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வரும் கோயில்கள் ஆகியவற்றில் தான் அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுள்ளன. இதற்கு கோயில் தணிக்கை பிரிவு ஆண்டுதோறும் தணிக்கை செய்யாததே முக்கிய காரணமாகும்.
எனவே கோயில் தணிக்கை பிரிவுக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து கோயில் வரவு செலவுகளை தணிக்கை செய்து முறைகேடுகளை கண்டறிய வேண்டும். கோயில் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்க வேண்டும். ஆலயங்களில் உள்ள அறங்காவலர் குழுவினரை ரத்து செய்துவிட்டு, சிறப்பு அதிகாரிகளை நியமித்து கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், தமிழகத்தை பின்பற்றி கோயில் நிர்வாகங்களை சீர்திருத்த செய்யவும் நடவடிக்கை எடுத்து கோயில்களையும், அதன் சொத்துகளையும் பாதுகாக்க வேண்டும் என்று ஆளுநர், முதல்வரிடம் மனு தந்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.