புதுச்சேரியில் அரசு விழாவில் முறையான பாதுகாப்பு அளிக்கத்தவறிய காவல் ஆய்வாளர் சஸ்பென்ட்
மேடையில் விழா நடந்த போது, எம்எல்ஏ நேரு தனது ஆதரவாளருடன் கீழே நின்றபடி தலைமை செயலாளருக்கு எதிராக பேசினார்.
![புதுச்சேரியில் அரசு விழாவில் முறையான பாதுகாப்பு அளிக்கத்தவறிய காவல் ஆய்வாளர் சஸ்பென்ட் Puducherry Dismissal of police inspector for providing proper security at government function TNN புதுச்சேரியில் அரசு விழாவில் முறையான பாதுகாப்பு அளிக்கத்தவறிய காவல் ஆய்வாளர் சஸ்பென்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/06/c7fb62a5854d7501868a0504c73585d11686041535783194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்ட பணிகளில் முறைகேடுகளால் கட்டுமான பணிகள் தரமற்றதாகவும், குறைபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது. பல கட்டுமான பணிகள் தடைபட்டு வேலைகள் நடைபெறாமல் உள்ளது என்றும் உயர் அதிகாரிகளின் அலட்சிய போக்கும் லஞ்ச ஊழலமே காரணம் என உருளையான்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு குற்றம்சாட்டி இருந்தார். மேலும் தனது தொகுதியில் ஓராண்டில் கட்டி முடித்திருக்க வேண்டிய அண்ணாதிடல் கட்டுமான பணி 2 ½ ஆண்டுகளை கடந்தும் காட்சி பொருளாக உள்ளது என்றும் புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் கூட செய்யவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.
அதோடு ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் மற்றும் ஊழலை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் நேரு எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். நேற்று காலை தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகையிட்டார். அவருடன் வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர், தமிழர் களம் அழகர், திராவிடர் விடுதலை இயக்கம் லோகு.அய்யப்பன், நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைமை செயலகத்தின் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தலைமை செயலாளரை சந்திக்க வேண்டும் என கோரினர். ஆனால், தலைமை செயலாளர் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்த உலக சுற்று சுழல் தின விழாவில் தலைமை செயலாளர் பங்கேற்று இருந்ததால் அங்கு சென்றனர். மேடையில் விழா நடந்த போது நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளருடன் கீழே நின்றபடி தலைமை செயலாளருக்கு எதிராக பேசினார். இதனால் விழா தடைப்பட்டது. மேடையில் இருந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோர் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் நேரு எம்.எல்.ஏ., விழாவில் முதலமைச்சர் பேச இடையூறு செய்யாமல் வெளியேறுவதாக கூறி சென்றார். அவருடன் வந்த ஆதரவாளர்களும் அங்கிருந்து சென்றனர். இதை தொடர்ந்து விழா நடந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை முறையாக கையாளவில்லை என ஒதியஞ்சாலை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது அவர் இடைக்கால பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக புதுச்சேரி காவல் துறை டி.ஜி.பி மனோஜ் குமார் லால் உத்தரவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)