விழுப்பரத்தில் கனமழை எச்சரிக்கை! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு
கனமழை பொழிவு ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைத்திடும் பொருட்டு பேரிடர் பாதுகாப்பு மையம் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு, முகாம்கள் தற்பொழுது தயார் நிலையில் உள்ளது.

விழுப்புரம்: வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை ; முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் .எஸ்.ஏ.இராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் எஸ்.ஏ.இராமன், தெரிவித்ததாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி பெய்து வரும் கனமழையினை எதிர்கொள்ளும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் விதமாக அனைத்து பகுதிகளுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுமட்டுமல்லாமல், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் தயார் நிலையில் இருந்திடவும், சம்மந்தப்பட்ட பகுதிகளில் கனமழை பொழிவு ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைத்திடும் பொருட்டு பேரிடர் பாதுகாப்பு மையம் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு, முகாம்கள் தற்பொழுது தயார் நிலையில் உள்ளது. மேலும், முகாம்களில் தங்கும் பொதுமக்களுக்கு தேவையான உணவுகள், சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்திடும் வகையில் உணவுப்பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனமழை அதிகமிருந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழையினை எதிர்கொள்ளும் விதமாக காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை குழுவினர் தயார் நிலையில் இருந்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் உடனடியாக உயர் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்வதோடு, பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற தன்னார்வலர்களையும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
கடலோர பகுதிகளான மரக்காணம், வானூர் மற்றும் கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளில் களமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், மீனவ கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளையும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான பணிகளையும் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை சார்பில், அணைகள், ஏரிகள் நீர் இருப்பு குறித்த தகவலினை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தெரிவித்திடவும், நீர் வெளியேற்றப்படும் பட்சத்தில் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு உரிய தகவலினை வழங்கி பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் அணைகள், ஏரிகள் மற்றும் ஆற்று பகுதியில் தேவைகேற்ப மணல் மூட்டைகள், பாதுகாப்பு தடுப்பு கட்டைகள் போன்றவைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து வகையான அரசு மருத்துவ மனைகளிலும், காய்ச்சல் மற்றும் விஷக்கடி போன்ற மருந்து வகைகள் தேவையான அளவுஇருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மருத்து முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின் பகிர்மான கழக பணியாளர்களை சுழற்சி முறையில் தொடர்பணி மேற்கொள்ளவும், தேவையான மின்கம்பங்கள், மின்கம்பிகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவும், ஜெனரேட்டர் போன்ற மின் சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் கனமழை தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களான கட்டணமில்லா அழைப்பு எலர் 1077, புகார் தொலைபேசி எண்: 04146-223265, தொடர்புகொள்ளலாம்.
சாத்தனூர் அணையிலிருந்து 15000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள்துறை, மில்வளத்துறை, தமிழ்நாடு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆகியோர் களமழை பாதிப்பு ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் எஸ்.ஏ.இராமன், தெரிவித்தார்.





















