Fengal Cyclone: அச்சுறுத்தும் கடல் அலைகள் ; மூடப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலைகள்
ஃபெங்கல் புயல் எச்சரிக்கையாக புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
வங்ககக்கடலில் வலுப்பெறும் ஃபெங்கல் புயல் தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து புயலாக மாற உள்ளது. இதனால் புதுச்சேரியில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது, கடல் அலைகள் இரண்டு மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்துக் கொண்டு கரையை நோக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
புதுச்சேரி கடல் வழக்கத்தை விட அதீத சீற்றம்
கடந்த மூன்று நாட்களாகவே புதுச்சேரி கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படும் நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர், இதனிடையே வார இறுதி நாட்களை கழிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வருவது வழக்கம். அந்த வகையில் இன்று புதுச்சேரி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் பலர் வந்து கடற்கரை சாலையில் நேரத்தை கழித்து செல்கின்றனர்,
புதுச்சேரி கடற்கரை சாலைகள் மூடப்பட்டது
ஒரு சிலர் காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறி கடலில் இறங்கி செல்பி எடுத்தும் விளையாடியும் செல்கின்றனர், ஆனால் வார இறுதி நாள் என்பதால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதாலும் கடற்கரை சாலையில் யாரும் கடலில் இறங்காதவாறு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மீறி கடலில் இறங்குபவர்களை காவல்துறையினர் எச்சரித்து வெளியேற்றி வருகின்றனர்.
குறிப்பாக புதுச்சேரி, சென்னை மெரினா, திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகளில் கடல் சீற்றத்துடன் இருந்துவருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை:
இன்று (நவ.29) வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் (நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்கள்) புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நவ.30ம் தேதி, வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் - மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், இன்று (நவ.29) காலை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து, 29-ம் தேதி மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், 30-ம் தேதி காலை முதல் மாலை வரை காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், நவ.29-ம் தேதி காலை முதல் 30-ம் தேதி மாலை வரை: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதன் பிறகு, காற்றின் வேகம் குறையக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நவ. 29-ம் தேதி காலை சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, காற்றின் வேகம் உயர்ந்து, 29-ம் தேதி மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், 30-ம் தேதி காலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், 30-ம் தேதி மாலை முதல் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், 29-ம் தேதி காலை முதல் 30-ம் தேதி மாலை வரை, காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, காற்றின் வேகம் குறையக்கூடும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகளில், நவ.29 முதல் டிச.1ம் தேதி வரை, தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச.1 மற்றும் டிச.2ம் தேதிகளில், கேரள – தெற்கு கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.