மத்திய பாஜக அரசு தமிழ் மொழியை மட்டுமல்ல, தமிழ் கடவுள்களையும் அழிக்க முயற்சிக்கிறது - சி.வி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு
மொழிப்போர் தியாகிகள் இல்லை என்றால் இன்றைக்கு தமிழ்நாடு இந்தி நாடாக இருந்திருக்கும் - சி.வி.சண்முகம்
மத்திய ஆளும் பாஜக அரசு தமிழ் மொழியை மட்டுமல்ல, தமிழ் கடவுள்களையும் அழிப்பதற்கு முயற்சி செய்து வருகிறது எனவும் திமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நேரடியாக மோடிக்கு அளிக்கும் வாக்கு என விழுப்புரம் அடுத்து வளவனூர் பகுதியல் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்தார்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் அடுத்த வளவனூர் பகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார்:
இன்றைக்கு தமிழ்நாடு இருப்பதற்கும், நம் அனைவரும் சுயமரியாதையோடு நடப்பதற்கும் காரணம் தமிழுக்காக உயிர் நீத்த தியாகிகள் தான். 50 ஆண்டு காலத்தில் பல்வேறு சதிகளை முறியடித்து மத்தியில் காங்கிரஸ், பிஜேபி என யார் ஆட்சி செய்தாலும் தமிழை ஒழிப்பதற்கு குறிப்பாக, பிராந்திய மொழிகளை அழிப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
தமிழகத்திற்கு வரும்போது மட்டும் தான் தமிழில் பேசுவார்கள். வணக்கம், நன்றி என இரு வார்த்தைகளை பேசிவிட்டு, பேருக்கு திருக்குறளை சொல்லிவிட்டு தமிழை அழிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். மொழிப்போர் தியாகிகள் இல்லை என்றால் இன்றைக்கு தமிழ்நாடு இந்தி நாடாக இருந்திருக்கும். இன்றைக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியை திணிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைக்கு மொழியை மட்டுமல்ல நாம் வணங்கும் கடவுளையே மாற்றும் முயற்சி ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் கடவுள்களை மறைக்க பார்க்கிறார்கள். இன்றைக்கு மொழிவெறி தலை விரித்தாடி வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த மாநிலமாகவும், முன்னோடி மாநிலமாக இருப்பதற்கு காரணம் திராவிடம்.
50 ஆண்டு காலம் நம்முடைய சுயமரியாதை, தன்மானத்தை காப்பாற்றியுள்ளது என்றால் அது தமிழ் மொழி. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் ஒரு மொழியை அழிக்க வேண்டும். தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் திராவிடத்தை அழிக்க வேண்டும். வரலாற்றை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் இதைத்தான் தொடர்ந்து இந்தியாவை ஆண்டு வரும் கட்சிகள் காங்கிரஸ், பாஜக செய்து வருகிறது. இந்த ஒரு கொள்கையில் மட்டும் பாஜக, காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கிறது. அனைத்து பிராந்திய மொழிகளையும் அழிக்க இந்த அரசுகள் செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு அதற்கு சிலர் துதி பாடி வருகிறார்கள். மொழிப்போர் தியாகிகளின் மீது நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் என பேசிக்கொண்டு தமிழ் மொழியை அழிப்பவர்கள் யார் என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
இன்றைக்கு வரலாற்றை மாற்றுவதற்கு மிகப்பெரிய சதி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்றால் திமுகவை நம்பி பலனில்லை. திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது. தமிழ் பேசி வியாபாரம் செய்கிற ஒரு இயக்கமாக திமுக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் தமிழ் பேசும் திமுகவினர் டெல்லியில் இந்தி பேசுகிறார்கள். தமிழ்நாடும், தமிழ் மொழியும், பண்பாடும், மாநில சுயாட்சியும், உரிமைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். இன்றைக்கு ஊடகங்கள் விலை போய்விட்டன, மத்திய அரசுக்கும், திமுக அரசுக்கும் ஊடகங்கள் விலை போயுள்ளன. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை சொல்வதற்கு ஊடகங்கள் அச்சப்படுகின்றன. ஊடகங்கள் இன்றைக்கு ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றன. திமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நேரடியாக மோடிக்கு அளிக்கும் வாக்கு. தமிழுக்கு எதிராக அளிக்கும் ஓட்டு. நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தால் முதலில் ஆதரவு அளிக்கும் கட்சியாக திமுக இருக்கும். மேலும் ஆதரவு அளித்து ஆட்சியில் அங்கம் வைக்கப்போவது திமுக என குற்றம் சாட்டினார். இந்த பொதுக்கூட்டத்தில் வளவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்