அதிரடி காட்டும் காவிரி டெல்டா.. தொடங்கியது பணி... கடலூர் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...!
காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 207 பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 675 கி.மீ நீளத்திற்கு சிறப்பு தூர்வாரும் பணி தொடங்கியது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 16 கோடி மதிப்பீட்டில் 207 பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கியது.
ரூ.16 கோடியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கியது
காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 207 பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய தினசரி நாளங்காடி கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட கமலீஸ்வரன்கோயில் தெருவில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுவதையும், கொத்தங்குடி பகுதியில் சிதம்பரம் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இருபுற வெளிவட்ட சாலை அமைப்பதற்கான பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்கம் மையம் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
சிதம்பரம் வட்டத்தில் உள்ள பொன்னாங்கன்னி மேடு மதுரா, சி.தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தில் 837 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் தில்லைநாயகப்புரம் வாய்க்கால் மற்றும் 2 பாசன வாய்க்கால்களையும் சேர்த்து 14.60 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும்பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு நடப்பாண்டு கடலூர் மாவட்டத்தில் காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள 207 பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 675 கி.மீ நீளத்திற்கு சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்குட்பட்ட 36 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம், அம்ரூத் 2.0 மற்றும் ஜல் ஜீவன் மிஷன் நிதியின் கீழ் செயல்படுத்த நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.255.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது இப்பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட கமலீஸ்வரன் கோயில் தெருவில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிதம்பரத்திற்கு ஏராளமான சுற்றுலா மற்றும் ஆன்மிக பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் வந்துசெல்வதால் அவர்களின் தற்போதைய தேவைக்கேற்பவும், எளிதில் பாதுகாப்பான முறையில் வந்துசென்றிடும் வகையில் சுமார் 1.41 ஏக்கர் பரப்பில் தரைதளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் கூடிய நவீன அடிப்படை வசதிகளுடன் தங்குமிடம் ஏற்படுத்திடும் பொருட்டு சுற்றுலா ஓய்வு இல்லம் மற்றும் சுற்றுலா விளக்க மையக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 24 தங்கும் அறைகள், கலையரங்கக்கூடம், உணவருந்தும் கூடம், சுற்றுச்சுவர், வாகனநிறுத்தம் போன்ற பணிகள் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்த பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி விரைவாக நிறைவடைந்தால் விவசாயிகள் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும், விவசாய நிலங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.





















