அண்ணா சிலை அவமதிப்பு விவகாரத்தில் ஏடிஎஸ்பியிடம் திமுக பிரமுகர் வாக்குவாதம் - அதிர்ச்சி வீடியோ
விழுப்புரம்:அண்ணா சிலை அவமதிப்பு விவகாரம் தொடர்பாக விழுப்புரம் ஏடி எஸ் பியிடம் கண்டமங்கலம் ஒன்றியகுழு பெருந்தலைவர் வாசன் வாக்குவாதம்.
கண்டமங்கலத்தில் அண்ணா சிலை அவமதிப்பு விவகாரம் தொடர்பாக விழுப்புரம் ஏடிஎஸ்பியிடம் கண்டமங்கலம் ஒன்றியகுழு பெருந்தலைவர் வாசன் வாக்குவாதம் செய்து காவல் துறை சர்வதிகாரியாக செயல்படுவதாக கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும் ஆ.ராசாவின் உருவப்படத்திற்கு செம்புள்ளி கரும்புள்ளி வைத்து அவரது உருவப்படத்துடன் அண்ணா சிலை மீது மாட்டி விட்டு அண்ணாவின் தலை பகுதியில் திமுக கட்சி கொடியை கொண்டு மூடிவிட்டு சென்றுள்ளனர்.
அண்ணா சிலை அவமதிப்பு விவகாரம்: விழுப்புரம் ஏடிஎஸ்பி யிடம் கண்டமங்கலம் ஒன்றியகுழு பெருந்தலைவர் வாசன் வாக்குவாதம்... @abpnadu pic.twitter.com/7cwhqCqhf1
— SivaRanjith (@Sivaranjithsiva) October 6, 2022
அதிகாலையில் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருப்பதை கண்ட அப்பகுதியினர் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தன் பேரில் விரைந்து சென்ற போலீசார் அண்ணா சிலை மீது இருந்த செருப்பு மாலையையும் ஆ.ராசாவின் புகைப்படத்தினை அகற்றினர். இதனை தொடர்ந்து கண்டமங்கலம் போலீசார் அண்ணா சிலையை அவமதிக்கும் விதமாக செருப்பு மாலை அணிவித்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம் காவல்நிலைய போலீசார் கண்டமங்கலம் ஒன்றிய பாஜக தலைவர் பிரகலாதன் உட்பட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில், போலீசார் விசாரணைக்கு பின் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆகாஷ், அப்பு, வீரமணி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்து விடுவித்ததாக கூறி தி.மு.க.வை சேர்ந்த கண்டமங்கலம் ஒன்றிய தலைவர் வாசன் வளவனூர் காவல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அண்ணாவின் சிலையை அவமதித்தவர்களை விடுவித்ததற்கு காரணம் என்ன நாங்கள் ஆளுங்கட்சி என்பதால் அமைதியாக இருந்தோம், சர்வாதிகாரமாக நடக்கிறதா போலீஸ் என ஆவேசமாக வாசன் போலீசாருடன் வாக்குவாதம் செய்கிறார். அதற்கு அங்கிருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அமைதியாக பேசும்படியும் கூறினார். அதற்கு நீ யார் என்று அப்பிரமுகர் கோபமாக பேசுவதும் மேலும் அவருடன் வந்த தி.மு.க.வினரும் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.