Dengue: புதுச்சேரியில் 487 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..! கடும் அவதியில் மக்கள்..!
புதுச்சேரியில் 487 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்
புதுச்சேரியில் இந்த ஆண்டு தற்போது வரை 487 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் திட்டம் மூலமாக மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசன் அறிகுறி தொடங்குவதற்கு முன் மற்றும் பின் நாட்களில் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். டெங்கு என்பது 4 சீரோ வகைகளுடன் ஏடிஸ், ஈகிப்ட் வகை கொசுவால் பரவும் வைரஸ் நோயாகும்.
கொசு இனப்பெருக்கம்:
ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை சுத்தமான நீர் தேக்கத்தில் கொசு இனப்பெருக்கம் செய்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு புதுவை மாநிலத்தில் உச்சத்தை எட்டியது. தற்போது டெங்கு பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. சுத்தமான தண்ணீர் ஒரு வாரத்துக்கு மேல் தேங்குவதால் டெங்கு நோய் பரப்பும் ஏடிஸ் கொசு உருவாக வாய்ப்பு உள்ளது. டெங்கு காய்ச்சல் சாதாரண காய்ச்சல் அறிகுறிகளுடன் தானாகவே சரியாகி விடும். அடுத்தநிலையில் உடலில் கண் புருவங்களுக்கு பின் தாங்க முடியாத அளவில் தலைவலி, மூட்டுகளை முறிக்கும் அளவிலான வலி இதன் காரணமாகவே இந்த நோய் டெங்கு காய்ச்சல் என்றும் பெயர் உருவானது. மற்றொரு பெயரான மூட்டு முறிவு காய்ச்சல் என்றும் பெயர் பெற்றது.
மூன்றாவதாக டெங்கு காய்ச்சல் உருவாக்கும் வைரஸ் கிருமி ரத்த அணுக்களில் ஒன்றான ரத்த தட்டுகளை எந்தவிதமான அடியும் படாத நிலையில் ரத்த கசிவு உருவாக்குவதற்கும் காரணமாகிறது. இதன் காரணமாக டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. கடைசியாக உடலில் தண்ணீர் சத்துகுறைவு காரணமாக ரத்தநாடி மற்றும் ரத்த அழுத்தம் குறைகிறது. இதனை டெங்கு ஷாக் சிண்ட்ரோம் என அழைக்கிறோம். இந்த கடைசி இரண்டு வகை பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
பாதுகாப்பு அவசியம்:
டெங்கு காய்ச்சல் உருவாக்கும் வைரஸ்-க்கு தனி சிகிச்சை ஏதும் கிடையாது. நோய் அறிகுறிகளுக்குத்தான் உரிய சிகிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது. டெங்கு பரவுவதை தடுக்க கொசுப்புழு மற்றும் புகை மருந்து தெளிப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால் அலுவலகம், பள்ளிகளுக்கு செல் பவர்கள் கொசு கடிக்காத வண்ணம் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
ஜன்னல் வலைகள், கொசுவிரட்டி, மூலிகை கொசுவிரட்டிகள் முதலியவற்றை பயன்படுத்துவதன் மூலம் கொசு கடிப்பதை தடுக்கலாம். வாரம் ஒருமுறை வீடுகளை சுத்தப்படுத்தி உலர் தினம் கடைபிடிப்பதன் மூலம் கொசுப்புழுவின் வளர்ச்சியை தடைபடுத்தி டெங்கு பரவுவதை தடுக்கலாம். கடந்த ஆண்டு 1,673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என டாக்டர் ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.