காரைக்கால் துறைமுகத்தில் நீந்தமுடியாமல் கரை ஒதுங்கிய 100 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம்
இந்த திமிங்கலம் சுமார் 100 அடி நீளமும், 10 டன்னுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அங்கு போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் திமிங்கலம் முழுமையாக நீந்தமுடியாமல் தவித்தது.
காரைக்கால் துறைமுகத்தில் கரை ஒதுங்கிய 100 அடி நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நடுக்கடலில் விடப்பட்டது.
காரைக்காலை அடுத்த வாஞ்சூர் கடற்கரை பகுதியில் தனியார் துறைமுகம் இயங்கி வருகிறது. இங்கு நிலக்கரி, உரம், மணல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால், கடலின் நீரோட்டம் மாறி வருகிறது. இந்த நிலையில் நடுக்கடலில் மட்டும் வசிக்கும் ராட்சத திமிங்கலம் ஒன்று வழிமாறி காரைக்கால் தனியார் துறைமுகத்திற்குள் நுழைந்தது. இந்த திமிங்கலம் சுமார் 100 அடி நீளமும், 10 டன்னுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அங்கு போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால் திமிங்கலம் முழுமையாக நீந்தமுடியாமல் தவித்தது. இதனை பார்த்த துறைமுக ஊழியர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை சார்பில், அதிகாரிகள், காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு விரைந்து சென்று திமிங்கலத்தை எவ்வாறு நடுக்கடலில் கொண்டு விடுவது என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதற்கிடையே துறைமுகத்தை சுற்றியுள்ள மீனவ கிராம மீனவர்கள், சுமார் 30-க்கும் மேற்பட்டோர், பைபர் படகுகளில் சென்று துறைமுக அதிகாரிகள் உதவியுடன் ராட்சத திமிங்கலத்தின் வயிற்றில் கயிற்றை கட்டி படகு மூலம் கட்டி இழுத்தனர். சுமார் 4 மணி போராட்டத்திற்கு பிறகு திமிங்கலம் நடுக்கடலில் கொண்டு விடப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்