ரயில்வே தண்டவாளங்களில் அடுத்தடுத்து குவிந்த 6 சடலங்கள் - ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் திகைப்பு
ரயில்வே தண்டவாளங்களில் அடையாளம் தெரியாமல் அடுத்தடுத்து குவிந்த 6 சடலங்கள். அடையாளம் தெரியாமல் அவதிப்படும் ரயில்வே போலீசார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலைய எல்லை பெங்களுரு வழித்தடத்தில் கொத்தூர் வரையிலும், சேலம் வழித்தடத்தில் காக்கங்கரை வரையிலும், சென்னை வழித்தடத்தில் காட்பாடி அடுத்த லத்தேரி வரையிலுமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் அடுத்தடுத்து 6 உடல்கள் அடையாளம் தெரியாமல் அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கிறது. ஆனால் யாரும் உடலை கேட்டு வராததால் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் திணறி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில்நிலையம் அருகே உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் ரயில்வே கால்வாயில் உயிருடன் கிடந்த ஆணுக்கு சிகிச்சை அளிக்க தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
குடியாத்தம் ரயில் நிலையத்திற்கும் காவனூர் ரயில் நிலையத்திற்கும் இடையே கிட்டத்தட்ட 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடந்த நிலையில் அவரின் உடல் மற்றும் குடியாத்தம் காவனூர் பகுதியில் இருந்த சடலம், வாணியம்பாடி அருகே இருந்த சடலம் ஆகிய 3 சடலங்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரியில் உடற்கூர் ஆய்வுக்காக வைத்து உள்ளனர்.
அதே ஜோலார்பேட்டை டிக்கெட் கவுன்ட்டர் அருகில் சடலமாக கிடந்தவரின் உடல், ஜோலார்பேட்டை 1வது பிளாட் பாரம் யார்டு அருகே கிடந்த 2 சடலங்களை திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைத்து உள்ளனர்.
ஆனால் இதுவரையிலும் யாரும் உடலை அடையாளம்ம் காண முடியாத காரணத்தினால் ஆங்காங்கே மருத்துவ மனைகளில் 6 சடலங்களை பிணவறையில் வைத்து உள்ளனர். அடையாளம் தெரியாத காரணத்தினால் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.





















