திருவண்ணாமலைக்கு வருகை தரும் முதல்வர்.. சாதி சான்றிதழ் வழங்கக்கோரி குருமன்ஸ் பழங்குடியினர் போராட்டம்...!
திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்.டி. சாதிச்சான்று வழங்கக்கோரி குருமன்ஸ் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், ஆகிய தாலுகாக்களில் அதிகளவில் குருமன்ஸ் இன பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆகிய அனைவரிடமும் சாதி சான்றிதழ் கேட்டு மனுக்கள் அளித்துள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் குருமன்ஸ் பழங்குடியின இன மக்கள் எஸ்.டி. சாதிச்சான்று வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம் தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியும் எஸ்டி சாதி சான்றிதழ் வழங்குங்கள் என்ற பதாகைகளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையிலான அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட குருமன்ஸ் பழங்குடி இன மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்கள் தங்களது கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்களது வாழ்க்கை முறைகளை அதிகாரிகளுக்கு செயல்விளக்கம் செய்து காட்டினர். அதே சமயத்தில் அவர்கள் கலாசார முறைப்படி நடனமாடி தலையில் தேங்காய்களை உடைத்தனர். கோட்டாட்சியர் வெற்றிவேல், தாசில்தார் முனுசாமி, பரிமளா ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுக்கு குருமன்ஸ் பழங்குடியினர் எஸ்.டி. சாதிச்சான்றிதழ் வழங்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வருகிற 8 மற்றும் 9-ந் ஆகிய இரண்டு தேதிகளில் நலத்திட்ட உதவிகள், அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்து கொள்வதற்காக வருகிறார். இதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில், இந்த இனத்தை சேர்ந்த மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், முதல்வரின் நிகழ்ச்சிகளில் அதிக அளவில் எஸ்டி சாதி சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குருமன்ஸ் இன பழங்குடியின மக்கள் வலியுறுத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்