ஷாக் நியூஸ்: நவம்பரில் இந்த ரயில்கள் எல்லாம் ரத்தா? முழு விவர ரயில் பட்டியல் இதோ!
நவம்பர் 2026-ல் தெற்கு ரயில்வேயின் திருச்சி மற்றும் மதுரை கோட்டங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து, வழித்தடம் மாற்றம் மற்றும் நேரம் மாற்றம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

திருச்சி: தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு ரயில் தேதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பொறியியல் பணிகள் காரணமாக நவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சில ரயில்கள் முழுமையடையாமல் இயக்கப்படுவதும், சில ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்படுவதும், மற்றும் சில ரயில்கள் கால தாமதமாக இயக்கப்பட உள்ளது. இது தொடர்பான விரிவான விவரங்களை தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் என். ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் பகுதியாக ரத்து மற்றும் தொடக்க மாற்றம்
திருச்சிராப்பள்ளி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக பல முக்கிய ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சிராப்பள்ளியிலிருந்து காலை 08.40 மணிக்கு காரைக்கால் செல்லும் டெமு ரயில் (வண்டி எண்: 76820) நவம்பர் 1, 2, 4, 5, 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருவாரூர் நிலையத்துடன் நிறுத்தப்படும். இந்த ரயில்கள் திருச்சிராப்பள்ளியிலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், திருவாரூரிலிருந்து காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தாம்பரத்திலிருந்து காலை 09.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு பயணிகள் ரயில் (வண்டி எண்: 66045) நவம்பர் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், அங்கிருந்து தாம்பரம் திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்களின் தொடக்க இடங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காரைக்காலிலிருந்து பிற்பகல் 14.55 மணிக்கு திருச்சிராப்பள்ளி புறப்படும் டெமு ரயில் (வண்டி எண்: 76819) நவம்பர் 1, 2, 4, 5, 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் காரைக்கால் மற்றும் திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தனது பயணத்தை திருவாரூர் நிலையத்திலிருந்து வழக்கமான நேரமான பிற்பகல் 16.15 மணிக்குத் தொடங்கும்.
மேலும், விழுப்புரத்திலிருந்து சென்னை கடற்கரை செல்லும் மெமு ரயில் (வண்டி எண்: 66046) மற்றும் விழுப்புரம் - மயிலாடுதுறை மெமு ரயில் (வண்டி எண்: 66019) ஆகியவையும் குறிப்பிட்ட தேதிகளில் முண்டியம்பாக்கம் மற்றும் சேர்தனூர் போன்ற மாற்றுத் தொடக்க நிலையங்களிலிருந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் ஒழுங்குபடுத்துதல் மற்றும் புறப்படும் நேரம் மாற்றம்
பராமரிப்பு பணிகள் நடைபெறும் பாதைகளில் பாதுகாப்பான ரயில் போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் சில விரைவு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியில் குறிப்பிட்ட நிமிடங்கள் வரை ஒழுங்குபடுத்தப்பட்டு (நிறுத்தி வைக்கப்பட்டு) இயக்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில், பெரோஸ்பூர் கன்ட் - ராமேஸ்வரம் சூப்பர்பாஸ்ட் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20498) மற்றும் ஜோத்பூர் - மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22673) ஆகிய ரயில்கள் வழியில் உள்ள பாதுகாப்பான இடங்களில் முறையே 120 நிமிடங்கள் வரை ஒழுங்குபடுத்தப்படும்.
மேலும், திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16834), புதுச்சேரி - ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12868), மற்றும் சார்லப்பள்ளி - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 17077) உள்ளிட்ட ரயில்களும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு வழியில் நிறுத்தி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, சில முக்கிய ரயில்களின் புறப்படும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16127) நவம்பர் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து புறப்படுவதற்குப் பதிலாக, தாம்பரத்திலிருந்து 60 நிமிடங்கள் தாமதமாக அதாவது பிற்பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும்.
அதேபோல், புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் காகிநாடா போர்ட் சர்க்கார் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 17656) மற்றும் திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சோழன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22676) ஆகிய ரயல்களும் குறிப்பிட்ட தேதிகளில் மாற்றப்பட்ட நேரத்தில்கூட இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்டம்: கள்ளிக்குடி - திருமங்கலம் இடையே வழித்தட மாற்றம்
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கள்ளிக்குடி மற்றும் திருமங்கலம் இடையே இன்ஜினியரிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதன் காரணமாக, சில விரைவு ரயில்களின் வழித்தடங்கள் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
குருவாயூரிலிருந்து இரவு 23.15 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16128) நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த மாற்றப்பட்ட வழித்தடத்தின் காரணமாக இவ்வண்டி மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களுக்குச் செல்லாது. மாறாக, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் இந்த ரயிலுக்கு கூடுதல் நின்று செல்லும் வசதி (Stoppages) அளிக்கப்படும்.
இதேபோன்று, நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (வண்டி எண்: 16321) நவம்பர் 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வழக்கமான பாதையை மாற்றி அமைத்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் வழியாக இயக்கப்படும். இதனால் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பத்துரை, திண்டுக்கல், எரியோடு மற்றும் பாளையம் ஆகிய நிலையங்களில் வழக்கமான நிறுத்தங்கள் தவிர்க்கப்பட்டு, அதற்குப் பதிலாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























