கரூர் அருகே டிப்பர் லாரி மீது 40 டன் பாறை விழுந்ததில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு
300 அடி ஆழத்தில் 40 டன் எடை கொண்ட ராட்சத பாறையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த டிப்பர் லாரி ஓட்டுநர் 15 மணி நேர போராட்டத்திற்கு பின்பு உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் மீட்பு
கரூர் மாவட்டம், க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இதில் கிரசர் மேடு அருகே செயல்பட்டு வரும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த என்.டி.சி ப்ளூ மெட்டல் கல் குவாரி இயங்கி வருகிறது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கல் குவாரியில் சுமார் 300 அடிக்கு மேல் ஆழம் கொண்ட பள்ளத்தில் நேற்று நள்ளிரவு டிப்பர் லாரி ஒன்று கற்களை ஏற்றிக்கொண்டு மேலே வரும்போது எதிர்பாராத விதமாக 40 டன் எடை கொண்ட ராட்சத பாறை லாரியின் மீது விழுந்தது. லாரி ஓட்டுநர் சுப்பையா இடிபாடுகளில் உள்ளே மாட்டிக் கொண்டார். மேலும், ஜேசிபி ஓட்டுநர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே மாட்டிக் கொண்டனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து உள்ளே இருந்த ஜேசிபி ஓட்டுநர் இருவரை மீட்டனர்.
ஆனால், 40 டன் எடை கொண்ட ராட்சத பாறையின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட டிப்பர் லாரி ஓட்டுநர் சுப்பையாவை மீட்க முடியாமல் பலமணிநேரம் போராடினர். பின்னர் பாறையை வெடிகுண்டு வைத்து தகர்த்து ஜேசிபி இயந்திரம் மூலம் கற்களை அகற்றி விட்டு, லாரி டிரைவர் சுப்பையா உடல் பாதி எரிந்த நிலையில், உடல் வேறு உறுப்புகள் வேராக சிதைந்த நிலையில் மீட்டனர். கரூர் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த சுமார் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், சுப்பையாவின் சிதைந்த உடலை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மேலே எடுத்து வந்தனர். அப்போது ஓட்டுனர் சுப்பையாவின் உறவினர்கள் இழப்பீடு கொடுத்த பிறகு தான் உடலை வாங்குவோம் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சுப்பையாவின் உறவினர்கள் மற்றும் கல்குவாரி உரிமையாளரிடம் போலீசார் பேச்சுவார்த்தையின் ஈடுபட்டு உரிய இழப்பீட்டுத் தொகை தருவதாக கல்குவாரி நிர்வாகம் சார்பில் ஒப்புக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஓட்டுநர் சுப்பையாவின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் அருகே பிரபல கல்குவாரியில் 40 டன் எடை கொண்ட பாறை சரிந்த விபத்தால் கரூர் மாவட்டம் மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார மாவட்டத்திலிருந்து கல்குவாரி வேலைக்கு வந்துள்ள தொழிலாளர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.