![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
உளுந்தூர்பேட்டை அருகே 6ம் நூற்றாண்டு வட்டெழுத்துடன் கூடிய தமிழகத்தின் மிகத் தொன்மையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
இக்கல்வெட்டானது 5ம் நூற்றாண்டை ஒட்டிய எழுத்தமைதியை ஒத்து இருப்பதாக இதனைப் படித்து உதவிய மூத்த கல்வெட்டறிஞர் ராஜகோபால் சுப்பையா தெரிவித்தார்.
![உளுந்தூர்பேட்டை அருகே 6ம் நூற்றாண்டு வட்டெழுத்துடன் கூடிய தமிழகத்தின் மிகத் தொன்மையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு Ulundurpet Tamil Nadu oldest Kotravai sculpture with 6th century inscription discovered - TNN உளுந்தூர்பேட்டை அருகே 6ம் நூற்றாண்டு வட்டெழுத்துடன் கூடிய தமிழகத்தின் மிகத் தொன்மையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/05/0ae4da0ef312ddd37e2efbdf486e6fe41704476610558113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்துக்கு உட்பட்ட அங்கனூர் கிராமத்தின் மத்தியில் உள்ள குளத்தின் கரையில் மரங்கள் சூழ அதன் மத்தியில் சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல் உள்ளதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வதிற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்பிடையில் அங்கு அவருடைய நண்பர்கள் ஸ்ரீதர், தாமரை, குமரவேல், உதயராஜா, சுதாகர் ஆகியோர் அடங்கிய குழு இணைந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்துக்கு உட்பட்ட அங்கனூர் கிராமத்தின் மத்தியில் உள்ள குளத்தின் கரையில் மரங்கள் சூழ அதன் மத்தியில் சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக இருப்பது கொற்றவை சிலை என்பது கண்டறியப்பட்டது.
கொற்றவையின் சிலை
அந்த சிலையின் தலையைத் தடித்த கரண்ட மகுடம் அலங்கரிக்க, நீள் வட்ட முகத்தில், இருகாதுகளிலும் குண்டலமும், கழுத்தில் ஆரம் போன்ற பட்டையான அணிகலனும், அனைத்து தோள் மற்றும் கைகளிலும் வளைகள் அணிந்து இடையில் அழகான முடிச்சுடன் கூடிய ஆடை தொடைவரை நீண்டு காட்சி தருகிறது. தனது மேல் வலது கரத்தில் பிரயோக சக்கரமும் முறையே மற்ற வலது கரங்களில் வாள் மற்றும் அம்பு ஏந்தியபடி மற்றொரு கை முஷ்டி முத்திரையில் உள்ளது. மேல் இடது கரம் சங்கு தாங்கியும் முறையே மற்ற கைகள் கேடயம் ,வில் , ஏந்தி கீழ் இடது கரம் இடையின் மீது ஊரு முத்திரையிலும் காட்சி தருகிறது. கொற்றவையின் பின்புறம் வாகனமாக நீண்ட கொம்புகளுடன் அலங்கரிக்கப்பட்ட கலைமானுடன் கம்பீரமாக எருமை தலையின் மீது நின்றவாறு காட்சி தருகிறது. மேலும் கொற்றவையின் இடையருகே வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று ஆங்காங்கே சிதைந்த நிலையில் இருப்பதைக் காணமுடிந்தது. அதனைச் சுத்தம் செய்து படிக்கையில் அக்கல்வெட்டானது "அன்கனூர் என்ற ஊரைச் சேர்ந்த ஆறலை" என்பவர் இக்கொற்றவை படிமத்தைச் செய்து தந்த செய்தியைக் குறிப்பிடுகின்றது.
பல்லவர்கள் காலத்திய கொற்றவை சிற்பம்
இக்கல்வெட்டானது 5ம் நூற்றாண்டை ஒட்டிய எழுத்தமைதியை ஒத்து இருப்பதாக இதனைப் படித்து உதவிய மூத்த கல்வெட்டறிஞர் ராஜகோபால் சுப்பையா அவர்கள் தெரிவித்தார். கொற்றவை வழிபாடு குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டு இருந்தாலும் , சிலை வடிவில் இதுவரை ஆவணம் ஆகியுள்ள கொற்றவை சிற்பங்கள் யாவும் 6ம் நூற்றாண்டுக்கு பின்னான பல்லவர்கள் காலத்தியதே, தமிழகத்தில் முதன் முறையாகப் பல்லவர்களுக்குச் சற்று முந்திய காலகட்டத்தைச் சேர்ந்த கொற்றவை கிடைத்திருப்பது வரலாற்றுக்கு புதிய வரவாகும். இக்கொற்றவை சிற்பம் மூலம் அரசுருவாக்கம் முன்னரே நடுகல் வழிபாட்டுடன் , தொல் தாய் தெய்வ வழிபாட்டின் நீட்சியான கொற்றவை வழிபாடும் அக்காலகட்டத்திலே சிலை வழிபாடாக எழுச்சியுற்று இருந்துள்ளதை நம்மால் அறியமுடிகிறது. தமிழ் வட்டெழுத்துகளுடன் காணப்படும் இக்கொற்றவை சிற்பம் , இதுவரை தமிழகத்தில் ஆவணம் செய்யப்பட்டுள்ள கொற்றவைகளுள் இதுவே தொன்மையானதாகும் . மேலும் 1600 வருடங்களாக இன்றும் அவ்வூரின் பெயர் "அங்கனூர்" என்றே வழக்கில் உள்ளது தனிச் சிறப்பாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)