முதல் பயணம்.. பாகிஸ்தான் பிரச்னை.. போராட்ட புத்தகம்.. பிரதமர் மோடியின் பங்களாதேஷ் ட்ரிப் ஹைலைட்ஸ்..
“பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் நான் பங்கேற்றது எனது முதல் போராட்டங்களில் ஒன்று. அந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட நானும் சில தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்"
கொரோனாவுக்குப் பிறகான பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதாலேயே அவரது நேற்றைய பங்களாதேஷ் பயணம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. உலகிலேயே அதிக நாடுகள் பயணம் செய்த பிரதமர் என்கிற பெருமை வேறு அவருக்கு இருப்பதால், ”இந்த லாக்டவுன் காலத்தில் அவர் எப்படிதான் முடங்கி இருந்தார்?” என அவரது விமானப்பயணத்தைக் குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் பறந்தன. பங்களாதேஷ் சுதந்திரப்போரின் ஐம்பதாவது ஆண்டு அனுசரிப்பு விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தார் அவர்.
அவரது மற்ற எந்த வெளிநாட்டுப் பயணங்களைப் போலதான் இதுவும் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு விழாவில் அவர் பேசியவை ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அமைந்தன. பாகிஸ்தானைக் குறித்த அவரது கருத்துகள் அதிர்ச்சி ரகம் என்றால், பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார் எனக் குறிப்பிட்டது, ஒட்டுமொத்த பங்களாதேஷ் மற்றும் இந்திய மக்களுக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருந்தது.
அவர் பேசியவற்றிலிருந்து சில முக்கியப் பகுதிகள், “பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் நான் பங்கேற்றது எனது முதல் போராட்டங்களில் ஒன்று. அந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட நானும் சில தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே. இரு நாடுகளும் இணைந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டியது தென்கிழக்கு ஆசியாவின் இன்றியமையாத தேவை” எனக் குறிப்பிட்டார்.
தனது பேச்சில் ஒட்டுமொத்தமாகப் பாகிஸ்தானைச் சாடிய மோடி ”தன் நாட்டு மக்களையே பாகிஸ்தான் இனப்படுகொலை செய்தது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. அந்த மனிதநேயமற்றவர்கள் இன்றும் எஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நாம் எச்சரிக்கையுடன் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம்” என்றார்.
இந்தப் பேச்சையடுத்து அவசரநிலைக்காலத்தில் மோடி பங்கேற்ற போராட்டங்கள் குறித்து அவர் எழுதி 1978-இல் பதிப்பிக்கப்பட்ட ’சங்கர்ஷ்மன் குஜராத்’ என்னும் புத்தகம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. புத்தகத்தின் முதல் பக்கத்தில் அவர் பொதுமக்களுக்கு கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.
ஜனநாயகம் அழிக்கப்பட்டுவருவதால் இளைஞர்களைப் புதுவரலாறு படைக்க அழைப்புவிடுக்கும் வகையில் அவரது அந்தக் கடிதம் அமைந்திருக்கிறது. கூடவே 1971-இல் தான் குஜராத்தில் 1200 பெண்கள் உட்பட10,000 பாரதிய ஜன சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பங்களாதேஷை தனிநாடாக அங்கீகரிக்கக்கோரும் போராட்டத்தை அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.