ADMK Protest: காய்கறிகளால் மாலை அணிந்து திமுக அரசை கண்டித்து திருவாரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
முதல்வர் ஸ்டாலின் பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் காவிரி மூலம் கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தால் தான் கலந்து கொள்வேன் என கூறியிருக்க வேண்டும்.

திருவாரூரில் காய்கறிகளால் மாலை அணிந்து திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரயில் நிலையம் முன்பு முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காமராஜ் தலைமையில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தக்காளி, கத்திரிக்காய், இஞ்சு,புடலங்காய், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அலங்கரிக்கப்பட்டு இரு விவசாயிகள் மாலையாக அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் , முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகையில், ”520 பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து திமுக ஆட்சி. குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு இன்று தமிழகத்தில் 2.80 கோடி குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒரு கோடி குடும்ப அட்டைகளுக்கு கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,. மேலும் அதிமுக ஆட்சிகள் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு இன்று மூடு விழா நடத்துகிறார்கள் குறிப்பாக தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று ஆறுகளில் தண்ணீர் வந்த நிலையில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகிவிட்டது. இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை, முதல்வர் ஸ்டாலின் பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் காவிரி மூலம் கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தால் தான் கலந்து கொள்வேன் என கூறியிருக்க வேண்டும் ஆனால் அவர் வாய் திறக்கவில்லை” எனப் பேசினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

