அனுமதியின்றி இயங்கிய பட்டாசு குடோன்! தீடீரென வெடித்து சிதறல்... 2 பேர் பலி: தஞ்சை அருகே பரபரப்பு
அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது பட்டாசு குடோன் வெடித்து சிதறி இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது உடன் இதுகுறித்து வட்டாத்திகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே இன்று காலை அனுமதி இன்றி இயங்கிய பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர். சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது பட்டாசு குடோன் வெடித்து சிதறி இரண்டு பேர் இறந்து கிடந்தது தெரியவந்தது உடன் இதுகுறித்து வட்டாத்திகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாட்டாத்திக் கோட்டை போலீசார் மற்றும் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கரம்பக்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்தியகீர்த்தி தலைமையில் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெடி விபத்தில் உடல் சிதறி பலியான நெய்வேலி தென்பாதி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராசு (60), அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (18) ஆகியோர் உடலை மீட்டனர்.
பின்னர் இறந்த 2 பேரின் உடல்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தற்பொழுது திருவிழாகள் மற்றும் திருமண விழாக்கள் நடைபெறுவதால் நாட்டு வெடி அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போதுதான் 2 பேரும் வெடி வெடித்து இறந்துள்ளனர் என தெரிய வந்தது. மேலும் இடிபாடுகளில் சிக்கி இருந்த நதியா, கனகா, சுகன்யா, தவசீலன் ஆகிய நான்கு பேரும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட எஸ்.பி., ராஜாராம், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், மற்றும் வருவாய் துறையினர் சம்பவ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வெடி விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியதாவது: அனுமதி இன்றி இந்த நாட்டு வெடி கடை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மழை பெய்ததால் வெடியினை எடுத்து குடோனுக்குள் வைத்ததால் அதனால் அதிக அழுத்தம் ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த இடத்தின் உரிமையாளர் வர சொல்லியுள்ளோம் அவர் வந்த பிறகு தான் இது வெடி குடோனுக்காக வாடகைக்கு கொடுக்கப்பட்டதா என்பது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாமல் செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை மற்றும் வருவாய் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். மேலும் பட்டாசு குடோன் விபத்து சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




















