வெற்றி விநாயகா, வீர விநாயகா... விதவிதமாக விநாயகர்கள்: கும்பகோணத்தில் வெகு மும்முரமாக தயாராகும் சிலைகள்
தற்போது சிலை செய்ய வேண்டிய மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. வெயில் அடித்தால் மட்டுமே சிலைக்கான விலை கிடைக்கும் மழை பெய்தால் எங்கள் உழைப்பு மட்டுமின்றி எங்கள் வாழ்வாதாரம் முடங்கிவிடும்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 2 அடி சிலை முதல் 8 அடி வரை சிலைகள் வெகு வேகமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் பெருமான் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக எடுக்கப்படுகிறது. அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்து கொழுக்கட்டை, பொரி, சுண்டல், தேங்காய், பழம், கரும்பு வைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள். பின்னர் 3 அல்லது 5 நாட்கள் கழித்து வாணவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் பக்தர்கள் கரைப்பபார்கள்.
விநாயகர் சிலைகள் உற்பத்தி சூடுபிடிப்பு
அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கும்பகோணம் பகுதியில் விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் பல இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கும்பகோணத்தில் சீனிவாசநல்லூர், கும்பகோணம்- திருவாரூர், காரைக்கால் சாலை உட்பட பகுதிகளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது.
புதுபுது விநாயகர் சிலைகள் தயாராகிறது
இதுகுறித்து விநாயகர் சிலைகள் தயாரிப்பவர்கள் கூறியதாவது: விநாயகர் சிலைகளை வெகு மும்முரமாக செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது. விநாயகர் சிலை செய்ய தொடங்கி 10 நாட்கள் வரை ஆகிறது. பொதுவாக விநாயகர் சிலையை செய்ய 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும். அதன்பின்னர் வர்ணம் தீட்டும் பணிகள் நடக்கும். பேப்பர் மாவு, கடலைமாவு, பசை உள்ளிட்டவற்றால் சிலைகள் செய்யப்படுகிறது.
2 அடி முதல் 8 அடி வரை உள்ள சிலைகள்
ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையாகும். இந்த சிலைகளை கும்பகோணத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர். 2 அடி உயர சிலை முதல் 8 அடி உயர சிலைகள் வரை தயாரித்து வருகிறோம். இதுதவிர வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலும் சிலைகளை தயாரித்து தருகிறோம். இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில்இயற்கையான வண்ணங்கள் தீட்டப்பட்டு சிலைகள் செய்து வருகிறோம்.
தற்போது சிலை செய்ய வேண்டிய மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. வெயில் அடித்தால் மட்டுமே சிலைக்கான விலை கிடைக்கும் மழை பெய்தால் எங்கள் உழைப்பு மட்டுமின்றி எங்கள் வாழ்வாதாரம் முடங்கிவிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் மாசுப்படாமல் இயற்கை முறையில் தயாரிப்பு
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் தண்ணீர் மாசுபடாமல் இருக்கவும், செயற்கை வண்ணங்களால் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் விநாயகர் சிலைகள் தயாரிப்பவர்கள் எளிதில் கரையும் வகையில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் மண் மற்றும் எளிதில் கரையக்கூடிய காகிதம், மரவள்ளிக்கிழங்கு கூழ் ஆகியவற்றால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, செயற்கை வர்ணங்களை தவிர்த்து இயற்கையான முறையில் வர்ணம் பூசப்படுகிறது.
இந்த விநாயகர் சிலைகளை வாங்கும் இந்து அமைப்புக்கள், வாடிக்கையாளர்கள், விநாயகர் ஊர்வலக் கமிட்டியினர் கேட்கும் வண்ணங்களில் வர்ணம் பூசப்பட்டு கொடுக்கின்றனர். விநாயர் சதுர்த்திக்கு இன்னும் 30 நாட்கள் இருப்பதால் விநாயகர் சிலையை ஆர்டர் கொடுத்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.