Thanjavur: இட்லி மாவு அரைக்கும் மில்களில் அதிரடி சோதனை: ரேஷன் அரிசி பதுக்கிய முதியவர் கைது
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாவு அரைக்கும் மில்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு முதியவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாவு அரைக்கும் மில்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு முதியவரை கைது செய்தனர்.
தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முறையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் வினியோகத்தை கண்காணிக்கவும் பலதுறை அலுவலர்களை நியமித்துள்ளது.
ரேஷன் கடைகளில் வினியோகத்தை கண்காணிக்க வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அதிலும் தற்போது உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், அதை மாவுமில்களில் மாவாக அரைத்து விற்பனை செய்வதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் மாவு அரைக்கும் மில்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஒரு மில்லில் 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாவு அரைக்கும் மில்களில் அதிக அளவில் ரேஷன் அரிசி அரைக்கப்பட்டு மாவாக வினியோகம் செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவுகடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப் பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் பள்ளியக்ரகாரம், அம்மாப்பேட்டை, பாபநாசம், பண்டாரவாடை, ராஜகிரி, சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட மாவு அரைக்கும் மில்களில் சோதனை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு அரைக்கப்படுகிறதா? என சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது கும்பகோணத்தில் ஒரு மில்லில் மாவு அரைப்பதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 50 கிலோ எடை கொண்ட 5 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த அண்ணாதுரை (66) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், 'ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த காலங்களை விட தற்போது கடத்தலில் ஈடுபடுபவர்கள் முழுமையாக கைது செய்யப்படுகின்றனர். இருப்பினும் ஓரிரு இடங்களில் இதுபோன்று ரேஷன் அரிசி பதுக்கி மாவாக அரைக்கப்படுகிறது. அதையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.