குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தும் வாலிபர்கள் - கும்பகோணம் காந்தி பூங்காவில் நடக்கும் அட்டூழியம்
குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடும் இடத்தில் விளக்குகளுக்காக அமைக்கப்பட்ட கம்பிகளில் மின் ஒயர்கள் வெளியே தெரிகின்றன.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காந்தி பூங்காவில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை வாலிபர்கள் பயன்படுத்துவதால் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உரிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அல்லது பூங்காவிற்குள் இதுபோன்று சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களில் ஏறி விளையாடும் பெரியவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக காந்தி பூங்கா
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் டவுன் ஹால் ரோடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. மேலும் அதனை சுற்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் ஊஞ்சல், சீசா, கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, மின்விளக்கு வசதி, இரும்பு இருக்கைகள், சறுக்குகள், பாடல்கள் ஒலிக்க ஒலிபெருக்கிகள் ஆகிய வசதிகளுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு காந்தி பூங்கா அமைக்கப்பட்டது.
குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள்
மேலும் இந்த பூங்காவில் பொருமக்களின் வசதிக்காக 2 கழிவறைகள், தண்ணீர் தொட்டி மற்றும் குப்கைகளை சேகரிக்கும் இடத்திலேயே உரமாக்கும் பகுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். அங்குள்ள உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள். மேலும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வது, அமைதியான சூழலில் குழந்தைகள் விளையாடுவதை கண்டு ரசிப்பது என பொழுதை கழிப்பார்கள். இதனால் பெரியவர்களுக்கு மன நிம்மதி ஏற்பட்டு வருகிறது. வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டு கிடக்கும் குழந்தைகளுக்கும் மனசுக்கு பெரும் உற்சாகம் கிடைத்து வருகிறது. இதனால் இந்த காந்தி பூங்கா மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளது.
குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்களில் விளையாடும் வாலிபர்கள்
பூங்காவில் ஊஞ்சல், பொம்மைகள், சீசா விளையாட்டு பலகை போன்றவை சிறுவர், சிறுமிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விளையாட்டு உபகரணங்களை வாலிபர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், பெரியவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகளை தாங்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு சாதனங்கள் பெரியவர்களின் எடையை தாங்குமா? மேலும் வாலிபர்கள் குழந்தைகளின் சீசா விளையாட்டு உபகரணத்தில் இருவருக்கு பதில் 6 பேர் அமர்ந்து விளையாடுகின்றனர். இதனால் அவை பலனற்று சேதமடையும் நிலையில் உள்ளது.
சீரமைக்கப்படாமல் உள்ள ஊஞ்சல்
ஏற்கனவே ஆலமரத்தின் அருகில் உள்ள ஊஞ்சலில் தொட்டில் சேதமடைந்துள்ளதால் அவை சீரமைக்காமல் உள்ளது. 2 ஊஞ்சல் இருந்த இடத்தில் தற்போது ஒரு ஊஞ்சல் மட்டும் தான் உள்ளது. அதே போல் சீசா என்று சொல்லக்கூடிய விளையாட்டு உபகரணத்தில் ஒரே நேரத்தில் 2 குழந்தைகள் மட்டும் விளையாட முடியும். ஆனால் இளைஞர்கள், இளம்பெண்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் ஒரு சீசாவில் 4 பேர் விளையாடுகின்றனர். சருக்குகளில் பெரியவர்கள் ஏறி சருக்குவதால் அவை நெளிந்து விடுகிறது. இதனால் அவை உடனே சேதமடைந்து விடுகிறது.
அதே போல் காந்தி பூங்காவில் அனைத்து பகுதியிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை போதிய அளவு இல்லாததால் தரையில் அமர்ந்து விடுகின்றனர். குறிப்பாக காந்தி மண்டபத்தில் அமர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைபயிற்சிக்கு வரும் முதியவர்கள் காந்தி மண்டபத்தில் அமர்ந்து பேசுகின்றனர். குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடும் இடத்தில் விளக்குகளுக்காக அமைக்கப்பட்ட கம்பிகளில் மின் ஒயர்கள் வெளியே தெரிகின்றன.
அபராதம் விதிக்க வேண்டும்
இதனால் குழந்தைகள் தெரியாமல் அந்த கம்பியில் கை வைத்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்து முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் விளையாட கூடிய விளையாட்டு பொருட்களில் பெரியவர்கள் விளையாடுவதை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அதையும் மீறி குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.