தஞ்சை: குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பித்த சிறுமி - பூதலூரில் மீட்கப்பட்டு ஆந்திராவுக்கு அனுப்பபட்டார்
’’அச்சிறுமியின் பெற்றோர் குறித்த தகவல்கள் உண்மையா என உறுதி செய்யப்படாத நிலையில், உடனடியாக, இவ்வளவு அவசர அவசரமாக இரவோடு இரவாக அனுப்ப வேண்டியதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது’’
தஞ்சாவூர் புறவழிச் சாலையில், ஆதரவற்று நின்றிருந்த சிறுமியை கடந்த ஜுலை 4 ஆம் தனது பைக்கில் அழைத்து வந்த ஒருவர், தெலுங்கு மட்டுமே தெரிந்த அச்சிறுமியை மாரியம்மன் கோவில் அருகே இருந்த சோதனைச் சாவடியில் பணியிலிருந்த ஆயுதப்படை பெண் காவலரிடம் ஒப்படைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, அச்சிறுமியை தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய போலீசார், வல்லம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் பின்னர் அச்சிறுமி குழந்தைகள் நலக்குழுவினர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு குழந்தைகள் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், தெலுங்கு மொழி மட்டுமே பேசக்கூடிய அச்சிறுமியை, ஆந்திர மாநில குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில், சிறுமி, அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு 12.50 மணிக்கு எழுந்து, சுவரில் மாட்டியிருந்த சாவியை எடுத்து மாடிக்குச் செல்லும் கதவை திறந்து அங்கிருந்து கீழே குதித்து, சுமார் 6 அடி உயர சுவரிலேறி தப்பியோடிவிட்டார். அவர் தப்பிச் சென்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது.
இதுபற்றி அரசு குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் விஜயா அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி.யின் நேரடி கண்காணிப்பில் தனிப்படை போலீஸார் அச்சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், பூதலூர் அருகேயுள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், 1098 என்ற கட்டணமில்லா ஹெல்ப் லைன் எண் மூலம் சைல்டு லைன் அமைப்பினரை தொடர்பு கொண்டு அவரது கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே தெலுங்கு மட்டுமே பேசக்கூடிய லட்சுமி என்ற சிறுமி ஆதரவற்று சுற்றித் திரிவதாக தெரிவித்துள்ளார்.
தகவலின்பேரில், தஞ்சாவூர் சைல்டு லைன் குழு உறுப்பினர் இளமதி, சென்று அக்குழந்தையை மீட்டு, குழந்தைகள் நலக்குழுத் தலைவர் உஷா நந்தினியிடம் தகவல் அளித்தார். அச்சிறுமியின் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார். அப்போதுதான் புகைப்படத்தில் உள்ள குழந்தை தஞ்சாவூர் அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து தப்பியோடிய ஆந்திர மாநிலச் சிறுமி கீதா என்பது தெரிய வந்ததையடுத்து, குழந்தைகள் நலக்குழுத் தலைவர் உஷா நந்தினியின் அறிவுறுத்தியபடி, அச்சிறுமியை பூதலூர் காவல் நிலையத்தில் சைல்டு லைன் அமைப்பினர் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியாகாந்தபுனேனி, கீதாவிடம், நேரடியாக தெலுங்கில் பேசினார். அப்போது, அச்சிறுமி கீதா, தனது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த எலுரு எனவும், தனது அம்மா திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டதாக அச்சிறுமி தெரிவித்தார். அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பிச் சென்ற பின்னர் இத்தனை நாட்களாக பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தாகவும், யாரும் தன்னிடம் தவறாக நடக்கவில்லை என்றும் பெரும்பாலானோர் அவர்களால் முடிந்த உதவியைச் செய்தனர், யாராவது அவ்வப்போது இரக்கப்பட்டு கொடுத்த உணவை சாப்பிட்டு வந்துள்ளார். பெரும்பாலான நாட்களில் உண்ண எதுவுமின்றி பட்டினியாக இருத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, அவரது சட்டப்பூர்வ பாதுகாவலரிடம் ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தனது சொந்த செலவில் மேற்கொள்ள இருப்பதாக எஸ்பி தெரிவித்தார்.
தற்போது மீட்கப்பட்டுள்ள சிறுமி கீதா, சுடிதார் மற்றும் மூக்குத்தி அணிந்துள்ளார். தப்பிச் சென்ற சமயத்தில் வேறு பாவாடை மற்றும் சட்டை அணிந்திருந்தார். அதேபோல, அப்போது மூக்குத்தி அணிந்திருக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், அச்சிறுமியை அவரது சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக அனுப்புவதற்காக, தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல அலுவலரான பெண் எஸ்ஐ, துணையுடன் அச்சிறுமி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அச்சிறுமியின் பெற்றோர் குறித்த தகவல்கள் உண்மையா என போலீசார், உறுதி செய்யப்படாத நிலையில், உடனடியாக, இவ்வளவு அவசர அவசரமாக இரவோடு இரவாக போலீஸார் அனுப்ப வேண்டியதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது என போலீசார் கூறுகின்றனர்.