பொங்கல் வரும் பின்னே... கரும்பு வந்தது முன்னே: தஞ்சையில் விற்பனை ஆரம்பம்
தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி தெரிவிக்கும் விழாவாகும்.

தஞ்சாவூா்: தஞ்சையில் பொங்கல் பண்டிகையையொட்டி தற்போதே கரும்பு விற்பனை தொடங்கி உள்ளது. இதை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி தெரிவிக்கும் விழாவாகும். உழவர்கள் தமது உழைப்பிற்கும் தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.

பயிர்த்தொழில் செய்பவர்களின் வாழ்வின் உற்பத்தி சார்ந்த இந்த விழா மத உணர்வும், இன உணர்வும் கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது. சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு நாள் நிகழ்வு என்றே இதை கூற வேண்டும். சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தை, உத்தராயணத்தைக் குறிக்கிறது. பொங்கல் பொதுவாக ஜனவரி 13 முதல் 16 வரை கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகிய நான்கு நாட்கள் தனி முக்கியத்துவம் வாய்ந்தவை.
தை பொங்கல் ஜனவரி 14 அன்று மகர சங்கராந்தியுடன் ஒத்திருக்கிறது, இது இந்தியா முழுவதும் பல்வேறு பிராந்திய பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை முன்னிட்டு அச்சு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படும். பொங்கல் பண்டிகை அன்று காலை பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி விட்டனர். இதற்கு ஏற்றார் போல் பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள கரும்புகள் விற்பனையும் தற்போது பல்வேறு இடங்களில் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கரும்பு, வாழை, வெற்றிலை, பரங்கிக்காய், வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
பொங்கல் கரும்பும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, சூரக்கோட்டை, துறையூர், திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், கம்பர்நத்தம், குளிச்சப்பட்டு, ராராமுத்திரைக்கோட்டை, வாளமரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்புகள் நடவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் அதனை அறுவடை செய்து சந்தைப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் கரும்பு விற்பனை தற்போதே தொடங்கி நடந்து வருகிறது.
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே இப்போதே பொங்கல் கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. பத்து கரும்புகள் கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. கரும்புகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் விற்பனை இதைவிட மும்முரமாக நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















